இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் வீரர் சுட்டுக் கொலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 பிப்ரவரி, 2013 - 13:14 ஜிஎம்டி

எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள்

இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த ஒரு பாகிஸ்தானிய இராணுவ வீரரை தாங்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

அவரது நடமாட்டம் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால் தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் அவர் பலியானார் எனவும் இந்திய இராணுவத் தரப்பு கூறுகிறது.

இந்த மோதலில் இரண்டு இந்தியப் படையினர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நௌஷேராப் பகுதியில் நடைபெற்றதாகவும் இந்தியத் தரப்பு கூறுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலுள்ள கோட்லி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக பாகிஸ்தானிய இராணுவத் தரப்பு கூறுகிறது. ஆனால் இந்த இரு சம்பவங்களும் தொடர்புடையதா என்று தெளிவாகத் தெரியவில்லை.

இருநாட்டுக்கும் இடையேயான எல்லைப் பகுதியின் இந்தியப் பரப்பில் சந்தேகத்துக்குரிய சில நடமாட்டங்கள் தென்பட்டன எனவும், இதையடுத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் இந்திய இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவிய ஒருவரை தாங்கள் சுட்டுக் கொன்றதாகவும், அப்போது அவர் ஒரு பாகிஸ்தானிய இராணுவ வீரர் என்பது தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"சடலம் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படுகிறது"

எல்லைப் பகுதியில் கடும் கண்காணிப்பு

சுட்டுக் கொல்லப்பட்டுள்ள வீரர், தமது படை வீரர் என்பதை பாகிஸ்தான் இராணுவம் உறுதி செய்துள்ளது. அவர் தெரியாத்தனமாக இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்துவிட்டார் எனவும் பாகிஸ்தானிய இராணுவம் கூறுகிறது.

பலியான தமது வீரரின் உடலை தம்மிடம் ஒப்படைக்கும்படி, இந்தியத் தரப்பிடம் கோரியுள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஒரு இராணுவ வீரருக்கு உரிய மரியாதையுடன், அவரது உடல் பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்கப்படும் என இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

இதே வேளை, இன்று காலை எல்லை பகுதியிலுள்ள கிருஷ்ணா காட்டி நிலப்பரப்பில் பாகிஸ்தானிய இராணுவத்தினர், இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தியதாகவும் இந்திய இராணுவப் பேச்சாளர் கர்ணல் தாஹியா கூறியுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.