100 கோடி செலவில் மதுரையில் தமிழ்த் தாய் சிலை: ஜெ.

  • 14 மே 2013
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
Image caption தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த்தாய் சிலை ஒன்று நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் கலை இலக்கியச் செல்வங்களையும் கட்டிடக்கலை நாகரீகப் பெருமைகளையும் உலகுக்கு பறைசாற்றும்படி தமிழ்த்தாய் சிலை அமையும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் மாதிரிகளை உருவாக்கி, தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும் என்றும் இன்று செவ்வாய்க்கிழமை அவர் சட்டமன்றத்தில் கூறினார்.

மேலும் சிறந்த தமிழறிஞர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் பல்வேறு விருதுகள் தவிர, இனி திருக்குறள் முதலான அரும்பெரும் இலகியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப்

மற்றும் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியமான சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் ஆகியோர் நினைவாகவும் விருதுகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கென சிறந்த மென்பொருள் உருவாக்குவோருக்கு 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது' வழங்கப்படும் என்றும் ஜெயலலிதாஅறிவித்தார்.