நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்

நரேந்திர மோடி நல்ல நண்பர்: ஜெயலலிதா
Image caption நரேந்திர மோடிக்கு என்னுடைய வாழ்த்து எப்போதுமே உண்டு: ஜெயலலிதா

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இன்று திங்கள் பிற்பகல் நடக்கும் மத்திய திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள புதுடில்லி புறப்பட்ட அவர், தனது இல்ல வாயிலில் சிறிது நேரம் செய்தியாளர்களிடம் உரையாடியபோது இந்த வாழ்த்தினை பகிர்ந்துகொண்டார்.

'நரேந்திர மோடி பாஜக தேர்தல் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது உட்கட்சி விவகாரம், அது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் தனிப்பட்ட முறையில் மோடி எனக்கு நல்ல நண்பர், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்பொழுதுமே உண்டு' என்றார் ஜெயலலிதா.

மேலும், மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்றும், குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுபவர் என்றும் ஜெயலலிதா புகழ்ந்தார்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாக்களில் இரண்டு தடவைகள் ஜெயலலிதா கலந்து கொண்டிருக்கிறார்.

நரேந்திர மோடியும், 2011ல் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் மோடி பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.