மாநிலங்களவைத் தேர்தலுக்காக அதிமுக 5 வேட்பாளர்களை அறிவித்தது

சட்டமன்றத்தில் அதிமுகவின் உறுப்பினர்களைக் கொண்டே 4 உறுப்பினர்கள் இலகுவாக வென்றுவிட முடியும். 5- வது உறுப்பினருக்கு பழைய கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்
Image caption சட்டமன்றத்தில் அதிமுகவின் உறுப்பினர்களைக் கொண்டே 4 உறுப்பினர்கள் இலகுவாக வென்றுவிட முடியும். 5- வது உறுப்பினருக்கு பழைய கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்

எதிர்வரும் ஜூன் 27 அன்று நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தல்களில் (ராஜ்ய சபா) தமிழகத்தில் ஆளும் அஇ-அதிமுக சார்பில் 5 பேர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

டாக்டர் வி. மைத்ரேயன், எஸ். சரவணபெருமாள், டி. இரத்தினவேல், கே. ஆர். அர்ஜுனன் மற்றும் ஆர். லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய இந்தத் தேர்தல்களில் தமிழகத்திலிருந்து 6 பேர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு 150 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவற்றில் 34 உறுப்பினர்களின் வாக்குக்களைப் பெற்றால் மாநிலங்களவைக்கான தேர்தலில் ஒருவர் வெல்லமுடியும்.

அந்த அளவில், அதிமுக உறுப்பினர்களின் வாக்குகளிலேயே 4 வேட்பாளர்கள் வென்றுவிடமுடியும். 5-வது இடத்திற்கு மேலும் 20 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. கடந்த சட்ட மன்றத்தில் அதிமுக கூட்டணியிலிருந்த இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்களின் ஆதரவில் 5-வது வேட்பாளரும் வெல்லமுடியும் என்பது அக்கட்சியின் கணிப்பு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி?

Image caption இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி. ராஜா

தற்போது பதவிக்காலம் முடியும் 5 பேரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவும் ஒருவர். அக்கட்சியினர் அவ்விடத்தை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்தும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கைவிடுத்தும் அவர் எதுவும் பதில் அளிக்கவில்லை.

இன்று புதுடில்லி சென்றிருக்கும் முதல்வரை அங்கேயே பர்தனும் மற்றவர்களும் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் , ஐந்து வேட்பாளர்களை அறிவித்த அதிமுக, ஆறாவது இடத்தில் வேண்டுமானால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ இடது சாரிக் கட்சிகளோ தங்களது வேட்பாளர்களை நிறுத்தலாம் என்று கூறியதாக , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை பரிசீலித்துவருவதாக அவர் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திமுக தனது வேட்பாளர் ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்ப முயல்கிறது. ஆனால் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் ஆதரவு இல்லாமல் அதன் வேட்பாளர் வெற்றி பெற இயலாது.

இதேவேளை, கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, பின்னர் அக்கட்சியோடு கடுமையாக முரண்பட்டு நிற்கும் தேமுதிகவின் நிலைப்பாடு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.