மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவிப்பு

  • 21 ஜூன் 2013
'திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை': பாமக
Image caption 'திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை': பாமக

பாட்டாளி மக்கள் கட்சி எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தல்களைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

சில கட்சிகள் ஆதரவு கோரி பாமகவை அணுகியிருந்தாலும், தேர்தல்களை புறக்கணிக்கவேண்டும் என்று இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் கூடிய அக்கட்சியின் தலைமை செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடனும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் ஏற்கெனவே கட்சி எடுத்திருக்கும் முடிவில் மாற்றமில்லை எனவும் பாமக வலியுறுத்துகிறது.

களத்தில் நிற்கும் 4 அதிமுக வேட்பாளர்களினதும், அக்கட்சியின் ஆதரவுடன் நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி ராஜாவினதும் வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், ஆறாவது இடத்திற்குத் தான் திமுக தலைவர் மு கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் தேமுதிகவின் இளங்கோவனுக்குமிடையே போட்டி நிலவுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று தலா 2 இடங்களில் வென்ற மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

திமுக- தேமுதிக போட்டி

Image caption திமுக வேட்பாளர் கனிமொழி

திமுகவிற்கு சட்டமன்றத்தில் 23 இடங்கள் உள்ளன. எனவே, 27 வாக்குக்கள் கனிமொழிக்கு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெற்றி பெற 34 வாக்குக்கள் தேவைப்படும்.

தேமுதிகவிற்கு சட்டமன்றத்தில் 29 இடங்கள் இருந்தாலும்கூட, அவர்களில் 7 பேர் தங்கள் கட்சித் தலைமை மீது அதிருப்தி கொண்டு அ இஅதிமுக ஆட்சியை ஆதரித்து வருகின்றனர். எனவே, தேமுதிக வேட்பாளருக்கு இன்றைய நிலையில் 22 வாக்குக்களே உறுதியாக உள்ளன.

இந்நிலையில், 3 உறுப்பினர்களைக் கொண்ட பாமக தேர்தலை புறக்கணிக்கிறது. 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் தன் நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் தேமுதிகவை ஆதரிக்கக்கூடும் என்றும் வதந்திகள் உலவுகின்றன. ஆக போட்டி நிலவும் இரண்டு வேட்பாளர்களும் தலா 27 வாக்குக்கள் பெற்று சமநிலையில் இருப்பார்கள்.

அத்தகையதொரு சூழலில் 7 அதிருப்தி-தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி-தோல்வி அமையலாம். தவிரவும், இத்தேர்தல்களில் இரண்டாவது விருப்பு வாக்கு என்ற முறையும் இருக்கிறது. அதுவும் முடிவினைத் தீர்மானிக்கக்கூடும்.

இரண்டாவது விருப்பு வாக்கு அல்லது அதிருப்தி-தேமுதிக வாக்குகள் எதுவாயிருந்தாலும் அது முதல்வர் ஜெயலலிதாவின் முடிவின்படியே நடக்கும் வாய்ப்புள்ளது. அம்முடிவினால், அவர் எப்போதும் கடுமையாக எதிர்த்துவரும் திமுக அல்லது கூட்டணிக் கட்சியாக இருந்து அவரை எதிர்க்கத் துவங்கியிருக்கும் தேமுதிக இரண்டில் ஒன்றுதான் பயன் பெறப்போகிறது.

அந்த அளவில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு இது ஒரு இக்கட்டான சூழல் என்கின்றனர் நோக்கர்கள்.