வட-இந்திய மழைவெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1000-ஐ எட்டலாம்

  • 23 ஜூன் 2013
உத்தராகண்ட் மலைப் பிரதேசங்களில் 40 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர்
Image caption உத்தராகண்ட் மலைப் பிரதேசங்களில் 40 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர்

வட-இந்திய மாநிலங்களில் ஏற்பட்ட மழை, வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ எட்டக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுவரை 600க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநில மலைப் பிரதேசங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர்.

ஹெலிகொப்டர்கள் மூலம் ஆட்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். பல இடங்களில் சிறப்பு ரயில்கள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்படுகின்றனர்.

தாழ்வான இடங்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் சிக்கியுள்ளவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

கடந்த 60 ஆண்டுகளில், இம்முறை முன்கூட்டியே பெய்துள்ள பருவ மழையே பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பலியானவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கலாம் என்று அஞ்சுவதாக உத்தராகண்ட் முதல்வர் விஜய் பாகுகுணா பிபிசியிடம் தெரிவித்தார்.

இதேவேளை, கேதார்நாத் கோவில் பிரதேசத்தில் சிக்கியிருந்தவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.