"தேர்தல் செலவு எட்டு கோடி" - பாஜக தலைவருக்கு நோட்டீஸ்

கோபிநாத் முண்டே
Image caption கோபிநாத் முண்டே

இந்திய நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற கோபிநாத் முண்டே, 2009 தேர்தலில் எட்டு கோடி ரூபாய் செலவு செய்து தான் தேர்தலில் வென்றதாக அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவரது தேர்தல் செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கோபிநாத் முண்டே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த தேர்தல் செலவின அறிக்கையில் தனக்கு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகியிருந்ததாக கணக்கு காட்டியிருந்தார்.

வரம்பு மீறி தேர்தல் செலவு செய்தமைக்காக மஹராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கோபிநாத் முண்டேவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கடந்த வியாழனன்று மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கோபிநாத் முண்டே, 1980ல் தான் முதல் முதலாக தேர்தலில் போட்டியிட்டபோது ரூ.9000 மட்டுமே செலவுசெய்திருந்ததாகவும் ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தான் ரூ. 8 கோடி செலவுசெய்யும் அளவும் தேர்தல் செலவினங்கள் அதிகரித்துவிட்டன என்று குறிப்பிட்டிருந்தார்.

"கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரி யாரும் இருக்கக்கூடாது. அப்படியே இருந்தாலும் பரவாயில்லை. அடுத்த ஆறு மாதங்களில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறதுதானே." என்றும் அவர் கூறியிருந்தர்.

தேர்தல் செலவின விதிகளை மீறியதை கோபிநாத்தே ஒப்புக்கொண்டுவிட்டார், ஆகவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சத்யபரத் சதுர்வேதி கூறியிருந்தார்.