'மத்திய அரசு எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை கைவிட வேண்டும்': ஜெ.

  • 1 ஜூலை 2013
அடுத்த ஆண்டு மக்களைத் தேர்தலுக்குப் பின்னர் மத்திய அரசின் கொள்கைகளை மாற்ற நடவடிக்கை எடுப்போம்: ஜெ
Image caption அடுத்த ஆண்டு மக்களைத் தேர்தலுக்குப் பின்னர் மத்திய அரசின் கொள்கைகளை மாற்ற நடவடிக்கை எடுப்போம்: ஜெ

மத்திய அரசு புதிய இயற்கை-எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையைக் கைவிடவேண்டுமென்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வற்புறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ள புதிய விலை முறைமை மூலம் பயனடையப்போவது ஒரு பெரும் தொழில் நிறுவன குழுமமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை தற்போதுள்ள 4.2 டாலர் என்ற அளவிலிருந்து 8.4 டாலர் என்ற அளவில் உயரும் என்று கூறியுள்ள ஜெயலலிதா, அதனால் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் உரம் மற்றும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

'உரம் மற்றும் மின்சார விலைகள் உயரும், இறுதியில் சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்களின் மீதும் விவசாயிகளின் மேலும் பெரும் சுமை ஏற்றப்படும்' என்று தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

' முழுமையாக உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் இயற்கை எரிவாயுவிற்கு உற்பத்திச் செலவை மட்டும் கணக்கிட்டு விலை நிர்ணயிக்காமல் வெளிநாட்டுச்சந்தை விலைகளின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல' என்கிறார் ஜெயலலிதா.

மேலும், இயற்கை எரிவாயு விலை இந்திய ரூபாய் மதிப்பில் தான் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமேயன்றி, அமெரிக்க டாலர் மதிப்பில் அல்ல என்றும் கூறும் தமிழக முதல்வர், இந்திய மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்கள் அரசின் கொள்கைகளால் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதத்தில் பதவிக்காலம் முடியவுள்ள மத்திய அரசுக்கு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விலையினை நிர்ணயம் செய்வதற்கான எந்தவித தார்மீக அதிகாரமும் கிடையாது என்றும் அது அடுத்து அமையவுள்ள அரசின் பொறுப்பு என்றும் மத்திய அரசு விலை நிர்ணய கொள்கையை திரும்பப் பெறாவிட்டால், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் வரும் புதிய அரசினூடாக அதிமுகவின் முன்னெடுப்பில் மத்திய அரசின் கொள்கைகள் மாற்றியமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.