இரானில் அடைபட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தாருக்கு ஜெ. உதவி

  • 30 ஜூலை 2013
தமிழக முதல்வர் ஜெயலலிதா
Image caption தமிழக முதல்வர் ஜெயலலிதா

இரான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 16 தமிழக மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஒரு இலட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டிருக்கிறார்.

சவுதி அரேபிய நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 16 தமிழக மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வழி தெரியாமல் ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள் சென்றுவிட்டதன் காரணமாக, இரான் நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர்.

இரான் நாட்டு நீதிமன்றம் அவர்களை விசாரித்து, அவர்களுக்கு ஆறு மாதகாலம் சிறை, மேலும் தலா 5,750 அமெரிக்க டாலரை அபராதம் என தண்டனை வழங்கியது. அவர்களோ ஏற்கெனவே சிறையில் ஆறு மாதங்களைக் கழித்துவிட்டனர்

ஆனால் வறுமையின் காரணமாக அபராதத் தொகையை கட்டாததால் அவர்களை ஈரான் நாட்டு அரசாங்கம் சிறையிலிருந்து விடுவிக்கவில்லை, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இரானில் சிறையில் வாடும் மீனவர்கள் சட்ட உதவி பெறமுடியல்வில்லை, அவர்கள் பணிபுரிந்த தனியார் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து அவர்களை மீட்கவும் இந்தியத் தூதரகம் முயற்சி செய்யவில்லை எனக் குறை கூறி, அபராதத் தொகையினை செலுத்தி அவர்களை விடுவிக்க சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வற்புறுத்தி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இப்போது அவர்கள் குடும்பங்களின் வறுமை நிலையினை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்க அவர் உத்திரவிட்டிருப்பதாக மாநில அரசின் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.