இசையமைப்பாளர் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமி மறைந்தார்

  • 3 ஆகஸ்ட் 2013
தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்
தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்

மலையாள இசையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92.

அறுபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு இசை விருந்தளித்து நெஞ்சங்களை நிரப்பியவர் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்.

கர்நாடக சங்கீத விற்பன்னரான ஸ்வாமிகள், நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

1919ல் ஆலப்புழையில் பிறந்த தக்ஷிணாமூர்த்தி சிறு பிள்ளையாக இருக்கும்போதே கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார்

ஆறு வயதாக இருக்கும்போதே தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகளில் 27ஐ மனப்பாடமாக பாடத் தெரிந்தவர் இவர்.

13 வயதிலேயே அம்பலப்புழை ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் கச்சேரிகளை செய்ய இவர் ஆரம்பித்திருந்தார்.

1942ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய வானொலியில் தொடர்ந்து கர்நாடக இசைக் கச்சேரிகளை இவர் நடத்திவந்தார்.

1948ல் இவர் இசையமைத்த முதல் திரைப்படமான நல்ல தங்கா மலையாளத்தில் வெளியானது.

நவலோகம், சீதா, வியாபாரியிண்டே விலா, ஸ்ரீ குருவாயூரப்பன், இந்துலேகா உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் பெருவெற்றி பெற்ற பாடல்கள் பலவற்றுக்கு சொந்தக்காரர் இவர்.

இளையராஜா, யேசுதாஸ் போன்றவர்களால் குரு ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்டவர் இவர்.

ஏ ஆர் ரகுமானின் தந்தை இசையமைப்பாளர் ஆர்.கே.சேகர்கூட தக்ஷிணாமூர்த்தியிடம் உதவியாளராக இருந்திருக்கிறார்.

பெரும்பான்மையாக இவர் மலையாளப் படங்களுக்கே இசையமைத்துள்ளார் என்றாலும், ஒன்பது தமிழ் படங்களிலும் இவர் இசையமைத்துள்ளார். ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா ஆகியவை அதில் அடங்கும்.

900க்கும் மேற்பட்ட பாடல்கள் இவரது உயிரோட்டமான இசையில் உருவானவை.

1948 முதலே தக்ஷிணாமூர்த்தி சென்னையில் வாழ்ந்துவந்திருந்தார் . மயிலாப்பூர் பக்கத்தில் போனால் சட்டை போடாமல் மேல் துண்டோடு மட்டும் இவர் வெளியில் உலவுதைப் பார்க்க முடியும் என்கிற அளவுக்கு எளிமைக்குப் பேர்போனவர் அவர்.

கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சங்கீத சரஸ்வதி விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.