உணவுப்பாதுகாப்பு மசோதா--திமுக மீது ஜெயா சாடல்

Image caption உணவுப்பாதுகாப்பு மசோதா--திமுக மீது ஜெயா சாடல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, அச் சட்டத்தை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது எனக் குறை கூறியிருக்கிறார்.

இன்று திங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஜெயலலிதா தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், ”இந்தச் சட்டம் சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஏழைகள் மற்றும் சாதாரண மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய இந்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?" எனக் கேட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்

அதேநேரம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குறித்து தமிழக அரசின் கருத்து கேட்கப்பட்ட போதே, அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து 2011ஆம் அண்டு டிசம்பரில் ”குழப்பமும், தவறுகளும் நிறைந்த மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால், தமிழக அரசுக்கு மிக அதிகமான கூடுதல் செலவு ஏற்படும்” எனக்குறை கூறி பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதை நினைவுகூர்ந்திருக்கிறார் ஜெயலலிதா.

'இலக்கு நிர்ணயிப்பது பயன் தராது'

மேலும் முன்னுரிமை குடும்பங்கள், பொதுக் குடும்பங்கள் என இரு வகைகளாக மக்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதும், 75 விழுக்காடு கிராமப்புற மக்களும், 50 விழுக்காடு நகர்ப்புற மக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும், இந்த மசோதா மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். அவர்.

தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில், ”முன்னுரிமை குடும்பங்கள்” என வரையறை செய்து, அவர்களுக்கு மட்டும் உணவு தானியத்தை மானிய விலையில் வழங்குவது என்பது மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தையே சீர்குலைக்கும் செயலாகும். ஏழை, எளிய மக்களுக்கு என வழங்கப்படும் சலுகைகள் ஏனையோரால் பறிக்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பயனடைய மாட்டார்கள் என்பதே இது போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் அனைத்திந்திய வரலாறு ஆகும் எனக் குறைகூறுகிறார் முதல்வர்.

தற்போது, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணைச் செயலாளர்,தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரை 62.55 விழுக்காடு ஊரகப் பகுதி மக்கள் மற்றும் 37.79 விழுக்காடு நகர்ப்புற பகுதி மக்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதன்படி பார்த்தால், தமிழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2.96 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசியில் சுமார் 1 லட்சம் டன் குறைக்கப்பட்டு விடும். இந்தப் பற்றாக்குறை அரிசியை வெளிச் சந்தையில் தான் கொள்முதல் செய்ய வேண்டி வரும். இது போன்ற நிலை ஏற்பட்டால், தமிழக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 3,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும். வறட்சிக் காலங்களில் வெளிச் சந்தையில் அரிசி கிடைக்காத நிலை வருகின்ற போது பொது விநியோகத் திட்டத்திற்கே பெரும் நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கிறார் முதல்வர்.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் 49 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் 37.79 விழுக்காடு நகர்ப்புற மக்கள் மட்டுமே தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்து இருப்பது முற்றிலும் நியாயமற்ற செயல். 100 விழுக்காடு மக்களுக்கும் அரிசி வழங்காத ஒரு திட்டத்தை எப்படி உணவுப் பாதுகாப்பு என்று கூறுவது எனவும்

குடும்பங்களின் மாதாந்திர நுகர்வோர் செலவினத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு எடுத்த புள்ளி விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு, முன்னுரிமை குடும்பங்களின் எண்ணிக்கையை வரையறுத்து, அதன் அடிப்படையில் மாநிலங்களுக்கான உணவு தானிய அளவை நிர்ணயிக்கும் முறை முறையற்றது.

மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள சமூக பொருளாதார இன வாரியான கணக்கெடுப்பு இன்னமும் முடிவடையாத சூழ்நிலையில்; வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களை அடையாளம் காணுவதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு இன்னமும் வகுக்காத நிலையில், மத்திய அரசு வரையறுத்துள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப மாநில அரசுகள் தகுதியுள்ள குடும்பங்களை கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றன. இது நடைமுறைக்கு ஒவ்வாத சாத்தியமற்ற செயலாகும் என்கிறார் ஜெயலலிதா.

மாநிலங்களுக்கு உணவுப் பொருட்கள் --'தட்டிக் கழிக்கிறது மத்திய அரசு'

தவிரவும் புதிய சட்டம் அமலுக்கு வருமானால் தற்போதைய நடைமுறைபடி அனைவருக்கும் வழங்குவதற்கு தேவையான அரிசியை மத்திய அரசு தராது

உணவுப் பொருட்களின் மானிய விலையை பொறுத்தவரையில், கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய் என்ற வீதத்தில் அரிசி மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர், குறைந்தபட்ச ஆதார விலைக்கு மிகாமல் மத்திய அரசால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் விலையில் வழங்கப்படும் என்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கிலோ அரிசியினை 20 ரூபாய் விலை கொடுத்து வாங்கக் கூடிய நிலைமை ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும். தற்போது வழங்கப்பட்டு வருவது போல் அப்போதும் விலையில்லாமல் அரிசி வழங்க பல்லாயிரம் கோடி ரூபாயை கூடுதலாகச் செலவழிக்கக் கூடிய நிலைமை தமிழக அரசுக்கு ஏற்படும். இது மாநில அரசின் நிதி நிலைக்கே பேராபத்தாக முடியும் என்கிறார் ஜெயலலிதா.

மேலும் மத்திய அரசினால் தேவையான அளவு உணவுப் பொருட்களை வழங்க இயலவில்லை எனில், அதற்குரிய நிதி மாநில அரசுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து மத்திய அரசு உணவு தானியத்தை வழங்க வேண்டிய தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறார் முதல்வர்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி அதில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்து பிரதமருக்கு கடந்த ஆகஸ்ட் இரண்டாம் நாளன்று கடிதம் எழுதியிருப்பதாகவும், இந்நிலையில் அம்மசோதாவிற்கு திமுக ஆதரவு தர தயாராகியிருப்பது தமிழக மக்களுக்கும் இழைக்கும் துரோகம் எனவும் ஜெயலலிதா சாடியிருக்கிறார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்