கஷ்மீரில் ஜூபின் மேத்தாவின் கச்சேரிக்கு எதிர்ப்பு

  • 7 செப்டம்பர் 2013
ஜூபின் மேத்தாவின் நிகழ்ச்சி நடக்கும் இடத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
Image caption ஜூபின் மேத்தாவின் நிகழ்ச்சி நடக்கும் இடத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பிரபல மேற்கத்திய இசை நடத்துனர் ஜூபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய ஆளுகைக்குட்பட்ட கஷ்மீரில் கஷ்மீர் பிரிவினைவாதிகள் சனிக்கிழமையன்று கடையடைப்பை நடத்தியுள்ளனர்.

ஸ்ரீநகரில் சனிக் கிழமை மாலை மேத்தா தனது இசை நிகழச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்த மேத்தா, மேற்கத்திய இசை ரசிகர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு கலைஞர். ஆனால் இவரின் இந்த கச்சேரி, கஷ்மீரில் நிலைமை சகஜமாகிவிட்டது என்பதை வெளியுலகுக்கு காட்டவும் மனித உரிமை மீறல்களை மறைக்கவும் அரசால் எடுக்கப்படும் ஒரு முயற்சி என பிரிவினைவாதிகள் கூறுகின்றனர்.

பவேரியன் ஸ்டேட் ஆர்கெஸ்ட்டிராவைச் சேர்ந்த மேத்தா பீதோவன் உள்ளிட்டோரின் பாடல்களை இசைக்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ஜம்மு கஷ்மீர் மாநில முதல்வர் ஆதரவு வழங்கியுள்ளார்.

அதே நேரம் பிரிவினைவாதிகள் போட்டியாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அந்த நிகழ்ச்சி நடக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்துக்குப் போக தம்மை பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை என்று பிரிவினைவாத இயக்கங்கள் புகார் கூறுகின்றன.