அத்வானி எதிர்ப்பை மீறி பாஜகவின் பிரதமர் வேட்பாளரானார் மோடி

  • 13 செப்டம்பர் 2013

இந்தியாவின் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நரேந்திர மோடி பிரதமருக்கான வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்திருக்கிறார். இதற்கு பாஜகவின் மூத்த தலைவர் எல் கே அத்வானி உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்திய தலைநகர் புது தில்லியில் இருக்கும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் வீட்டில் வெள்ளியன்று கூடிய பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஆனால் இந்த கூட்டத்தில் அத்வானி கலந்துகொள்ளவில்லை.

தலைநகர் டெல்லியில் இருந்தும் இந்த கூட்டத்தில் அத்வானி கலந்துகொள்ளாமல் போனதற்கு அந்த கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் கூறப்படவில்லை. ஆனால், நரேந்திரமோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இப்போதே அறிவிப்பதற்கு அத்வானி ஒப்புக்கொள்ளவில்லை என்று ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டுவருகின்றன.

அதேசமயம், பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பது மரபு என்று கூறிய ராஜ்நாத் சிங், அந்த மரபுப்படியே நரேந்திரமோடியை இப்போது தாம் அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா ரயிலில் பரவிய தீயில் 58 இந்துக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான மிக மோசமான கலவரங்கள் நாட்கணக்கில் நடந்தன. வலது சாரி இந்துத்துவ அமைப்புக்கள் இந்த படுகொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த கலவரங்களில் 2000 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள்.

இந்த கலவரங்கள் மற்றும் படுகொலைகளை, குஜராத் முதல்வர் பதவியில் இருந்த நரேந்திர மோடியே தூண்டிவிட்டார் என்று அவர் மீது கடுமையான புகார்கள் கூறப்பட்டன. வலதுசாரி இந்துத்துவ கடும்போக்கு கொள்கையாளராக அறியப்படும் மோடி, தனது அரசியல் நம்பிக்கைகளுக்காக குஜராத்தில் மதச்சிறுபான்மையினர் படுகொலையை தூண்டிவிட்டார் என்றும், அந்த படுகொலைகளைத் தடுக்கவேண்டிய முதல்வர் பொறுப்பில் இருந்த அவர், அதை தடுக்க நினைத்த மாநில காவல்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தார் என்றும் காவல்துறை அதிகாரிகளே மோடி மீது புகார்கள் கூறிவருகின்றனர்.

அதேசமயம் இந்த குற்றச்சாட்டுக்களை மோடி தொடர்ந்து மறுத்து வருகிறார். இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் மறுக்கிறார். மேலும் தன் மீதான இத்தகைய புகார்கள் குறித்து விசாரிக்க அரசாலும், நீதிமன்றங்களாலும் நியமிக்கப்பட்ட விசாரணை அமைப்புக்கள் எவையும் தம் மீதான புகார்களுக்கான ஆதாரங்கள் எதையும் அளிக்கவில்லை என்று கூறும் மோடி, தமக்கு எதிராக இதுதொடர்பில் எந்த வழக்கும் பதிவாகவில்லை என்றும் வாதாடிவருகிறார்.

Image caption கசந்த உறவு

இப்படியான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் சந்திக்கும் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது இந்தியாவின் மத சிறுபான்மையினர் வாக்குகளை பாஜக அணிக்கு கிடைக்காமல் செய்துவிடும் என்று பாஜகவின் ஒரு பிரிவினர் கருதுவதாக கூறப்படுகிறது. மேலும் மோடியை முன்னிறுத்துவதை அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலரும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் பாஜக கூட்டணியில் 17 ஆண்டுகளாக இருந்த நிதிஷ்குமார் விலகிவிட்டார். ஆனால் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் சிவசேனா மற்றும் அகாலிதளம் ஆகிய இரண்டு கட்சிகள் மோடிக்கு ஆதரவளித்துள்ளன.

சொந்தக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாமலும், நீண்டநாளைய கூட்டணி கட்சியின் எதிர்ப்புக்கும் இடையில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதேசமயம், இந்தியாவின் தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக, நகர்ப்புற நடுத்தரவர்க்க வாக்காளர்களிடம் அதிகரித்துவரும் கோபத்தை அடுத்த தேர்தலில் அறுவடை செய்யவேண்டுமானால் நரேந்திர மோடியை பிரதமராக முன்னிறுத்துவது தான் நல்லது என்று மோடி ஆதரவாளர்கள் வாதாடுகிறார்கள்.

காரணம், தற்போதைய மத்திய அரசு உறுதியான முடிவெடுக்காத அரசு என்று பல தரப்பாராலும் பரவலாக குற்றம் சாட்டப்படும் பின்னணியில், உறுதியான முடிவெடுப்பவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் வர்ணிக்கப்படும் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதன் மூலம் பாஜக கூட்டணி பலனடையும் என்பது மோடி ஆதரவாளர்களின் வாதமாக இருக்கிறது. வாதாடுகிறார்கள்.

பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவது தவறு என்கிற அத்வானியின் அச்சம் மெய்ப்பிக்கப்படுமா அல்லது நாடு தழுவிய அளவில் பாஜக தலைமையில் வலுவான கூட்டணி எதுவும் இல்லாமல் வெறும் நரேந்திர மோடி மீதான நம்பிக்கை மட்டுமே வெற்றிபெறப் போதுமானதா என்கிற கேள்விக்கு அடுத்த தேர்தல் முடிவுகள் மட்டுமே விடையளிக்கமுடியும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.