டெல்லி பாலியல் வழக்கு - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

  • 13 செப்டம்பர் 2013

டில்லியில் கடந்த டிசம்பரில் மாணவி ஒருத்தி ஆறு பேரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி இவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என்று ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தார். அவர்களுக்கான தண்டனை ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அரச தரப்பு வழக்குரைஞர்கள் கோரியிருந்தனர். இருந்தும் தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று குற்றவாளிகள் வாதிட்டனர்.

குற்றவாளிகள்
குற்றவாளிகள்

இந்த சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதுடன், பாலியல் வல்லுறுவுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவும் வழிவகுத்தது.

கடந்த வாரம், இதே குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பதின்பருவ இளைஞர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சீர்திருத்த நிலையத்தில் கழிக்க தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் மார்ச்சில் சிறையில் இறந்து கிடந்தார்.

இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உயர் நீதிமன்றம் அந்த தண்டனையை உறுதி செய்த பிறகே அதை நிறைவேற்க முடியும். அதன் பின் உச்சநீதிமன்றத்தை அணுகவும், ஜனாதிபதிக்கு மேல் முறையீடு செய்யவும் குற்றவாளிகளுக்கு வாய்ப்பு உள்ளது.