"ஆதரித்து வாக்களித்தால் தொடர்ந்து உதவி செய்வேன்"

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜபக்ச
Image caption தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜபக்ச

இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் அரச தரப்பை ஆதரித்து வாக்களித்தால் அந்தப் பகுதிக்கான உதவிகளையும், அபிவிருத்திப் பணிகளையும் அதிகம் செய்வேன் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையின் வடக்கே கிளிநொச்சிக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்து, ஓமந்தையிலிருந்து முதலாவது பயணியாகக் கிளிநொச்சியைச் சென்றடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் போரினால் அழிவுக்குள்ளான பிரதேசத்தின் தேவைகள் அனைத்தையும் வித்தைக்காரனைப்போல, தன்னால் உடனடியாகப் பூர்த்தி செய்ய செய்ய முயாது என்றும் ஆதற்குத் தனக்கு போதிய கால அவகாசம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

பணமில்லை

Image caption கிளிநொச்சிக்கான ரயில் சேவை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் நிதியில்லை என்று தெரிவித்த மஹிந்த, இதனால் கடன்பெற்று இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். "இதனை அங்கீகரிக்காத எதிர்க்கட்சிகள் அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன்பெற்றிருக்கின்றது. உலக வங்கியிடமிருந்து கடன்பெற்றிருக்கின்றது. சீனாவிடமிருந்து கடன் பெற்றிருக்கின்றது. இந்தியாவிடமிருந்து கடன் பெற்றிருக்கின்றது என்று கடன் பெற்றிருப்பதைப் பற்றி பேசுகின்றார்கள். தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கடன் பெற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்றார் ஜனாதிபதி.

பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொண்டிருப்பதனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அவற்றைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இருபத்துமூன்று வருடங்களுக்குப் பின்னர், சனிக்கிழமையன்று முதலாவது பயணிகள் ரயில் கிளிநொச்சியைச் சென்றடைந்திருக்கின்றது. இதனையடுத்து, கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையில் நாள்தோறும் மூன்று ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்றும், அடுத்த ஆண்டு முற்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கிளிநொச்சி ரயில் நிலையத் திறப்பு விழா விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, இலங்கைக்கான இந்தியத்தூதுவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.