மரபு சாரா எரிசக்தி: மத்திய உதவி கோருகிறார் ஜெயலலிதா

  • 16 செப்டம்பர் 2013
Image caption மத்திய நிதி உதவி கோருகிறார் ஜெயா

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மரபு சாரா எரிசக்தியினை மேம்படுத்த தேசிய தூய்மை எரிசக்தி நிதியின் கீழ் ரூ.1500 கோடி கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் நிற்பதாகவும் காற்றாலை வழியே மட்டும் 7145 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 5000 மெகாவாட் உற்பத்தியாகவிருக்கிறது என்றும் கூறுகிறார் முதல்வர் தனது கடிதத்தில்.

இந்நிலையில் ரூ. 5999 கோடி செலவில் காற்றாலை மின்சார உற்பத்திக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்க தனது அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான நிதி உதவி கோரியபோது மத்திய மரபு சாரா எரிசக்தித் துறை 40 சத அளவு உதவி அளிக்கப்படலாம் எனக்கூறியும் பல்துறை அமைச்சர் குழு அப்பரிந்துரையினை நிராகரித்திருக்கிறது.

பாரம்பரிய எரிசக்தி ஆதாரத்தைக் குறைவாகவே பெற்றிருக்கும் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தனது அரசு சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியினைப் பெருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

அத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் இப்பிரச்சினையில் தலையிட்டு 1500 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிடவேண்டும் என ஜெயலலிதா கோருகிறார்.