ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலாற்றின் எதிர்காலம் குறித்து கேள்விகள்

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் ஓடும் நதியான பாலாறு முற்றாக வறண்டு போவதிலிருந்து காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை என்று மீண்டும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Image caption வறண்டு போன நிலையில் பாலாறு

கர்நாடக மாநிலத்தில் இந்த நதி உற்பத்தியாகும் இடத்தை அண்டியப் பகுதிகளில் பெருமளவில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக தமிழகத்தில் பாலாறு நதி பாயும் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துள்ளது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அந்த நதியை காப்பாற்ற முடியாத ஒரு சூழலும் ஏற்படும் என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார், வேலூர் மாவட்ட பாலாறு நதி பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ஜமுனா தியாகராஜன்.

கர்நாடகாவில் பாலாறு உற்பத்தியாகும் பகுதிக்கு அருகில் இருக்கும் ஹர்ஷபுரா எனும் பகுதியில், லட்சக் கணக்கான யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றும், இதன் காரணமாகவே பாலாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

ஆந்திர மாநிலத்தில் பாலாறு பாயும் பகுதிகளில் முப்பது இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதும் பிரச்சினையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மெத்தனம்

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில அரசுகளுமே இந்த நதி விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Image caption பாலாறு நதி மீதான ரயில்வே பாலம்

பாலாற்றை நம்பி வாழும் மக்களின் உரிமைகளை காப்பதற்கு கூட யாரும் முயற்சிக்கவில்லை எனவும் ஜமுனா தியாகராஜன் குற்றஞ்சாட்டுகிறார்.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பாலாற்றுப் படுகையிலிருந்து அளவுக்கு அதிகமான நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, நகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது எனவும் அவர் கூறுகிறார்.

அவ்வகையில் நாளொன்றுக்கு வாணியம்பாடிக்கு மேற்குப் புறமாக இருக்கும் ஆற்றுப் படுகையிலிருந்து, ஆழ் துளை கிணறுகள் மூலம், ஒரு கோடி லிட்டருக்கும் மேலாக எடுக்கப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.