இந்தியாவும் சீனாவும் எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன

  • 23 அக்டோபர் 2013
எல்லைப் பாதுகாப்பு உடன்படிக்கை பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் என்று சீனப் பிரதமர் கூறுகிறார்

சீனாவும் இந்தியாவும் எல்லைப் பாதுகாப்புத் தொடர்பில் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்த ஆண்டின் முற்பகுதியில் இருநாட்டு இராணுவத்திற்கும் இடையே முறுகல்நிலை காணப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் பீஜிங்கில் கருத்துதெரிவித்த சீனப் பிரதமர் லீ கேகியாங், இந்த உடன்பாட்டின் மூலம் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவும் என்று கூறினார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையே இமயமலையை அண்டிய பல இடங்களில் எல்லைத் தகராறு இருந்துவருகிறது.

1962 இல் சிறிய எல்லைப் போரும் நடந்தது. அடிக்கடி பதற்ற நிலைமைகளும் ஏற்பட்டுவந்தன.

இந்தியப் பிரதமரின் சீன விஜயத்தில் இருநாட்டு வர்த்தகம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

சீன சந்தைகளுக்குள் இந்திய வணிகத்தை கொண்டுசெல்வது மற்றும் சீன முதலீட்டை பெருமளவில் ஈர்ப்பது போன்ற வர்த்தக நடவடிக்கைகளில் இந்தியா கவனம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.