சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வார்

Image caption (படம்- அண்மையில் இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர், இலங்கை வெளியுறவு அமைச்சரை கொழும்பில் சந்தித்தபோது)

இலங்கையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்ளவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே வெளியுறவு அமைச்சர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'நான் அதில் கலந்துகொள்வேன் என்று என்னால் உறுதிப்படுத்தமுடியும். இலங்கைத் தமிழர்கள் விவகாரம் எங்களுக்கு முக்கியமானது' என்று குர்ஷித் தெரிவித்தார்.

மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, 'சரியான நேரத்தில் அதுபற்றிய முடிவு எடுக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.

இலங்கையுடனான உறவுகளை முறித்துக்கொள்ளுமாறு தமிழகத்திலிருந்து வருகின்ற கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தமிழக மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு இலங்கையுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்திய வெளியுறவு அமைச்சரின் முடிவு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாக பகிஷ்கரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அரசாங்கம் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில் வெளியுறவு அமைச்சரின் இந்தக் கருத்து வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.