ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இசைப்பிரியா: கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும்- சிதம்பரம்

  • 2 நவம்பர் 2013
Image caption இசைப்பிரியா ஆயுத மோதலில் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அவர் உயிருடன் பிடிபடும் காட்சி வெளியாகியுள்ளது

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறியப்பட்ட 'இசைப்பிரியாவை கொடூரமாக கொலைசெய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை' என்று இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

இறுதிக்கட்டப் போரின்போது, இலங்கை இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் பாலியல் கொடூரங்களுக்கு உள்ளான நிலையில் கொல்லப்பட்டுள்ளதாக சேனல் 4 வெளியிட்டுள்ள புதிய காணொளிப் பதிவு உண்மையானது என்று தான் நம்புவதாகவும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சேனல் 4 காணொளி வெறும் நாடகம் என்று பிபிசி தமிழோசையிடம் நேற்றுக்கூறிய இலங்கை இராணுவம், அதுபற்றி தாங்கள் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் கூட இல்லை என்று கூறிவிட்டது.

லெப்டினன் கர்ணல் இசைப்பிரியா இராணுவத்துடனான மோதலிலேயே கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, அந்த வீடியோ காட்சிகள் உண்மையானது என்று தான் நம்புவதாக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவரின் இந்தக் கருத்து வந்திருக்கிறது.

சிதம்பரம்- கருணாநிதி பேச்சு

Image caption கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடனேயே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது

திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர் சிதம்பரம் இன்று சனிக்கிழமை காலை பேச்சு நடத்தினார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் பேசிய சிதம்பரம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் அரசு தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார் என்று முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்றும் கூறினார்.

மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா இல்லையா என்று இன்னும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டம் முடிவு எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சிதம்பரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதை காங்கிரஸ் கட்சி மறுக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முழுமையாகப் புறக்கணிக்க வேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஆனால், கொழும்பு மாநாட்டில் தான் கலந்துகொள்வேன் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதிபடக் கூறிவிட்டார்.

ஆனால், 'இந்தியாவிலிருந்து சிறு துரும்புகூட காமன்வெல்த் மாநாட்டுக்கு போகக்கூடாது, அப்படி போனால் அதன் பலாபலன்களை அவர்களே அனுபவித்துக்கொள்ளட்டும்' என்று திமுக தலைவர் கருணாநிதியும் அறிக்கை விட்டிருந்தார். இந்த நிலையிலேயே, அமைச்சர் சிதம்பரம் கருணாநிதியை இன்று சந்தித்து பேச்சுநடத்தியிருக்கிறார்.

கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட்டது.

அழுத்தத்தில் மன்மோகன் சிங்

Image caption தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே முடிவு எடுக்கப்படும் என்று கருணாநிதிக்கு பிரதமர் ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்

இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி, மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து திமுக விலகிவிட்டபோதிலும் இருதரப்பு உறவுகளில் பெரியளவு பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சூழ்நிலையில், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழுத்தங்களைக் கொடுத்துவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் பலரும் இந்திய அரசு தமிழக மக்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

53 உறுப்பு நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் உச்சிமாநாடு இன்னும் இரண்டு வாரங்களில் கொழும்பில் நடக்கிறது. அதில் கனேடிய பிரதமர் கலந்துகொள்ளப் போவதில்லை. ஆனால் அங்கிருந்து கீழ்மட்ட தூதுக்குழுவொன்று செல்கிறது என்று முடிவாகிவிட்டது.

தமிழர்களின் மனநிலையை கருத்தில் எடுத்தே முடிவு எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதிக்கு ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றார். அதன் அர்த்தம் என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.