'கலந்துகொள்ள மாட்டேன்': மகிந்தவுக்கு மன்மோகன் அறிவித்தார்!

Image caption இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இரண்டாவது அரச தலைவர் மன்மோகன் சிங்

இலங்கையில் இந்த வாரம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காமன்வெல்த் மாநாட்டை மன்மோகன் சிங் பகிஸ்கரிக்க வேண்டும் என்று இந்தியாவுக்குள்ளே அழுத்தங்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக டில்லியிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் அரச படையினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இந்தியா காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணிக்க வேண்டுமென்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கோரிவருகின்றன.

இந்திய அரசின் முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால், காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் இரண்டாவது அரச தலைவராக மன்மோகன் சிங் கருதப்படுவார்.

முன்னதாக, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போர்க்குற்றங்கள் தொடர்பான பாரதூரமான கேள்விகள் பலவற்றுக்கு பதில் கூற வேண்டியிருப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரனும் கூறியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படையினரால் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், தமிழ் பொதுமக்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணை ஒன்றை நடத்துமாறு மகிந்த ராஜபக்ஷவைக் கோரவுள்ளதாகவும் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்