' பாலியல் தொல்லை தந்தவர் கங்குலி'-பெண் வழக்கறிஞர்

  • 29 நவம்பர் 2013
Image caption முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலி மீது பாலியல் புகார்

உச்சநீதிமன்றத்தில் பெண் பயிற்சி வழக்கறிஞர் ஒருவரிடம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரில் , அந்த நீதிபதி ஏ.கே. கங்குலி என்று அந்த வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் முன்னாள் நீதிபதி மீது அந்தப் பெண் பயிற்சி வழக்கறிஞர் பாலியல் புகாரை அளித்ததை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் இது பற்றி விசாரிக்க குழு ஒன்றை நியமித்தார்.

நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய 3 பேர் அடங்குவர். இந்நிலையில் அந்த குழு இந்த புகார் குறித்த தன் விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த விசாரணையில், தன்னை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலியின் கருத்தையும் பதிவு செய்துள்ளது அந்த குழு.

நீதிபதி கங்குலி செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசுகையில், இந்த குற்றச்சாட்டு முழுவதையும் மறுத்துள்ளார்.

டிசம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டில் நீதிபதி கங்குலி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின் பிப்ரவரி 3 , 2012 ஆம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது அவர் மேற்கு வங்காள மனித உரிமைகள் ஆணை குழுவின் தலைவராக பணியாற்றுகிறார்.