ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புலியைக் கொல்லத் திரண்ட கிராமவாசிகள்

Image caption பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் உலவும் ஒரு புலி

தென்னிந்தியாவில் உள்ள புலிகள் சரணாலயம் ஒன்றில் மூன்றுபேரைக் கொன்ற ஒரு புலியை சுட்டுக் கொல்லுமாறு அந்த சரணாலயத்தின் தலைமை வன அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அந்த சரணாலயத்தை ஒட்டியுள்ள ஒரு கிராமத்து மக்கள் ஒன்றுதிரண்டு அந்தப் புலியை கொல்வதற்காக சரணாலயத்துக்கு அருகே குழுமியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆனால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என நீலகிரி வினவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினரும், புலிகள் பாதுகாப்பு ஆர்வலருமான விஜய் கிருஷ்ணராஜ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்தக் குறிப்பிட்ட புலி, வயதான ஒரு புலியாகவோ அல்லது அடிபட்ட புலியாகவோ இருக்கக் கூடும் எனவும், மூவரைக் கொன்ற புலியை சரியாக அடையாளம் காண்பதிலும் சிரமங்கள் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பந்திப்பூர் விலங்குகள் சரணாலயத்தை சுற்றவரவுள்ள பகுதிகளிலேயே இந்த ஆட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அந்தப் புலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முன்னதாக உள்ளூர் ஆட்கள் வன இலாகா வாகனத்தை தாக்கியுள்ளனர்.

அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வளங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் வன விலங்குகளுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது வழக்கம்.

இந்தியச் சட்டங்களின்படி புலிகள் மிகவும் பாதுக்காக்கப்பட வேண்டியவை.