ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் மூன்று கொத்தடிமைகள் மீட்பு

ஒரிசாவைச் சேர்ந்த மூன்று பேர் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை ஒட்டிய புறநகர்ப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக கொத்தடிமையாக வேலை செய்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு வந்த புகாரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் டி சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழு அவர்களை மீட்டிருக்கிறது.

இந்த மூன்று பேரில் இருவர் பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்கள் என்றும், குடும்ப வறுமை காரணமாக ஒடிஷா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றும் இவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் டி சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இவர்களுக்கு கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட சம்பளம் முழுமையாக அளிக்கப்படவில்லை என்றும், இவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை என்றும், கொத்தடிமைகளாகவே கடந்த ஒரு ஆண்டாக நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில், தமிழ்நாட்டின் அரிசி ஆலை, செங்கல் சூளைகளில் இருந்த இத்தகைய கொத்தடிமை முறையிலான பணி என்பது சமீப காலமாக பெருமளவு ஒழிக்கப்பட்டுவிட்டதாக சந்திரன் கூறினார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒடிஷா உள்ளிட்ட பொருளாதார ரீதியில் பின் தங்கிய வட இந்திய மாநிலங்களில் இருந்து வறுமையான பின்னணியிலிருந்து வரும் படிக்காத சிறார்களும் சிறுமிகளும் இதுபோல கொத்தடிமைகளாக நடத்தப்படும் போக்கு அதிகரித்துவருவதாகவும் இதை தடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் டி சந்திரன் தெரிவித்தார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.