காரைக்காலில் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்

  • 27 டிசம்பர் 2013
பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான பிரச்சாரம்
Image caption பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான பிரச்சாரம்

பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு சிநேகிதியுடன் வந்த திருவாரூரைச்சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக புதுச்சேரி காவல்துறை உயரதிகாரி மோனிகா பரத்வாஜ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தனது தோழி ஒருவருடன், காரைக்காலில் இருந்த தமது நண்பர் ஒருவரை பார்க்க அவர் வந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு அவர் இருமுறை பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருக்கிறார்.

இந்த பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது சிநேகிதியும் திருவாரூரிலிருந்து காரைக்காலில் இருக்கும் அந்த சிநேகிதியின் நண்பரை பார்க்க வந்தனர். வந்த இடத்தில், அவரது சிநேகிதி உடல்நிலை சரியில்லாமல்போய் வாந்தியெடுத்ததைத் தொடர்ந்து இவர்கள் அவரது காரைக்காலில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குள் அவரது சிநேகிதியும் நண்பர்களும் சென்றிருந்தனர்.

அப்போது இந்த குறிப்பிட்ட பெண் வீட்டுக்கு வெளியில் நின்றிருந்த நேரம் அவரை மூன்று ஆண்கள் கடத்திச் சென்று அதில் ஒருவர் அவரை பாலியல்ரீதியில் பலாத்காரம் செய்ததாகவும், அந்த தாக்குதல் முடிந்த நிலையில் அந்த பெண் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் பேசி, அவரது நண்பர்கள் அவர் இருந்த இடத்திற்கு வந்து அவரை அழைத்துச் சென்றுகொண்டிருந்த நிலையில், அவரை எதிர்கொண்ட மற்றொரு கும்பல் ஆண்கள் இந்த பெண்ணை மட்டும் வழிமறித்து அவரை தனியானதொரு இடத்திற்கு கொண்டு சென்று ஆறுமுறை அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருத்தியதாகவும் அந்த பெண் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை பன்னிரெண்டு பேர் கைது

இதில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பத்துபேர் பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு 15 நாள் காவலுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மற்றும் ஒருவரை இன்று காவல்துறை கைது செய்திருக்கிறது. மற்றொருவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார்.

இதில் முதலாவது சம்பவத்தில் அவரை பாலியல் பலாத்காரம் செய்தவர் ஆட்டோ ஓட்டுநர் என்றும் இரண்டாவதாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குழுவில் இருந்தவர்கள் அனைவரும் தங்களின் இருபதுகளில் இருந்த இளைஞர்கள் என்றும் அந்த பெண் கூறினார். இந்த இரண்டாவது பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

புகாரை பதிவு செய்வதில் காவல்துறையினர் தாமதம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பதிவு செய்வதில் தாமதம் செய்ததற்காக, உள்ளூர் தலைமை காவல் அதிகாரி மற்றும் நிலைய எழுத்தர் ஆகிய இருவரை பணிநீக்கம் செய்திருப்பதாக புதுச்சேரி காவல்துறை உயரதிகாரி மோனிகா பரத்வாஜ் தெரிவித்தார். அவர்கள் மீதான விசாரணைகள் நடந்துவருவதாகவும், அவை முடிந்தபிறகுதான் அவர்கள் ஏன் புகாரை பதிவு செய்வதில் தாமதம் காட்டினார்கள் என்கிற விவரங்களை தம்மால் கூறமுடியும் என்றும் அவர் கூறினார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.