டெல்லி காவல்துறைக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

Image caption ஆம் ஆத்மி போராட்டம்

தனது அமைச்சரின் உத்தரவை கேட்க மறுத்த டெல்லி காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆதரவாளர்களும் இன்று திங்கட்கிழமை டெல்லி ரயில்வே தலைமையகமான ரயில் பவன் அருகே தர்ணா போராட்டம் நடத்தினர்.

முன்னதாக, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் அலுவலகத்திற்கு வெளியே இந்தப் போராட்டம் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவாலை ரயில் பவன் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து ரயில் பவன் முன்னாலேயே போராட்டம் தொடர்ந்தது.

காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஓர் இடத்தில் நடக்கும் போதைப் பொருள் பாவனை மற்றும் பாலியல் தொழில் தொடர்பில், டில்லி அமைச்சர் புகார் கொடுத்தும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க மறுத்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

‘குற்றம் நடந்ததாக கூறப்படும் இடத்தில், குற்றவாளிகளுடன் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைக்கிறார்கள். எனவே குறித்த காவல் நிலையத்தின் தலைமை அதிகாரியை வேலைநீக்கம் செய்ய வேண்டும் என்று டெல்லி தலைமைக் காவல் ஆணையரை கோரியுள்ளோம்’ என்றார் அர்விந்த் கெஜ்ரிவால்.

கடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக உள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

உகாண்டா பெண்கள் காவல்துறையிடம் புகார்

படத்தின் காப்புரிமை AFP
Image caption காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியமைத்தது

கடந்த புதன் கிழமை, உகாண்டா நாட்டு பெண்கள் நால்வர் மீது பாலியல் தொழில் குற்றம் சாட்டிய டெல்லியின் சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி தலைமையிலான சிலர், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

ஆனால் கைது செய்வதற்கான முறையான பிடியாணை இல்லாமல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

சோம்நாத் பார்தி தலைமையில் சிலர் காவல்துறை இல்லாமல் தாமாகவே பாலியல் தொழில் நடப்பதாக கூறப்படும் இடத்திற்கு வந்து தம்மை மிரட்டி தொந்தரவு செய்ததாக குறித்த உகாண்டா பெண்கள் சிலர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளனர்.

அதேசமயம், பாலியல் தொழில் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றுகோரி இந்த போராட்டத்தை அர்விந்த் கெஜ்ரிவால் துவங்கியிருக்கிறார்.

இச்சம்வத்தில் ஆப்ரிக்க பெண்களிடம் ஆம் ஆத்மி கட்சியினர் இனவெறியுடன் நடந்து கொண்டனர் என்றும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

'இந்த சம்பவம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும், இது ஆப்ரிக்க குடிமக்களை நோக்கி நடத்தப்பட்ட சம்பவம் அல்ல என்றும் 20 ஆப்ரிக்க நாட்டு தூதர்களுக்கும் இந்திய வெளிநட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீது கூறப்படும் புகார்களுக்கு நீதிமுறை விசாரணை நடைபெற்றுவருவதாகவும், அதன் முடிவுகள் வரும்வரை அர்விந்த் கெஜ்ரிவால் காத்திருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.