ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையாவர்: தமிழக அரசு

  • 19 பிப்ரவரி 2014
நளினி மற்றும் முருகன்

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இவர்கள் 7 பேரும் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டபடியால் அவர்களை விடுதலை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூன்று பேருக்கும் மரணதண்டனையை தவிர்த்து ஆயுள்தண்டனையாக குறைப்பதாக இந்திய உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இந்த சூழ்நிலையிலேயே இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்துவிடுவதற்கு தமிழக அரசு

முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று அறிவித்தார்.

இவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு 3 நாள் அவகாசம் அளிப்பதாகக் கூறிய ஜெயலலிதா, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்ளை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் சட்டமன்றத்தில் கூறினார்.

3 நாட்களுக்குள் மத்திய அரசு நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா

இது குறித்த அறிவிப்பினை இன்று புதன்கிழமை சட்டமன்றத்தில் வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, 'ஏழு பேரும் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 432-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முன்னதாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது' என்று கூறினார்.

மத்திய அரசுக்கு அவகாசம்

சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரது மரண தண்டனை நேற்று உச்சநீதிமன்றத்தால் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதேபோன்று முருகனின் மனைவி நளினியின் தண்டனையும் ஏற்கனவே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

தவிரவும் ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ராஜீவ் கொலை வழக்கில் முதலில் தடா நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தாலும், பின்னர் அது உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பேரறிவாளன்

இந்த ஏழுபேரையும் விடுதலை செய்வதென்று முடிவு செய்யப்பட்டுவிட்டாலும், ராஜீவ் கொலை வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்ட நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 435-ன்படி, அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தமது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் கூறினார்.

அரசின் முடிவினை திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் வரவேற்றிருக்கின்றனர்.

அடுத்துவரும் சில நாட்களில் ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகள் அனைவரும் விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.