இந்திய விமானப் படை விமான விபத்தில் ஐந்து பேர் பலி

இந்திய விமானப்படை சின்னம்
Image caption இந்திய விமானப்படை சின்னம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130ஜெ வகை விமானம் ஒன்று குவாலியர் நகரத்திற்கு மேற்கே 72 மைல் தொலைவில் உள்ள விமானத்தளம் ஒன்றில் விபத்துக்குள்ளானதில் அவ்விமானத்தின் உள்ளிருந்தவர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் நான்கு பேர் இந்திய விமானப்படை அதிகாரிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளியன்று காலை நடைபெற்ற வழக்கமான விமான பயிற்சியின்போது திடீர் இடிபாட்டில் சிக்கிய அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக, இந்திய பாதுக்கப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பிலான நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

புதியதாக இந்திய விமானப்படைக்கு பெறப்பட்டுள்ள இவ்வகை விமானம், வெள்ளிகிழமை காலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரத்திற்கு மேற்கே 72 மைல் தொலைவில் உள்ள விமானத்தளம் ஒன்றில், இந்திய நேரப்படி 10 மணியளவில் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு இவ்வகை விமானங்கள் பல இக்கட்டான நேரங்களில் வலு சேர்த்துள்ளதாகவும், பல விதமான சிறப்பம்சங்கள் கொண்ட இந்த விமானத்தின் வடிவமைப்பு போர் காலங்களுக்கு மட்டும் இல்லாமல் சிறப்பு சேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை அதிகாரி ஒருவர் கூறினார்.