வருமான வரி வழக்கு: ஜெயலலிதா ஏப்ரல் 28 ஆம் தேதி ஆஜராக உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தின் காப்புரிமை PTI
Image caption தமிழக முதல்வர் ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் ஜெயலிலிதா, மற்றும் அவரது தோழி சசிகலா மீது தொடரப்பட்டிருந்த வருமான வரிக்கணக்கை தாக்கல்செய்யாதது தொடர்பான வழக்கு வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில், முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் பத்தாம் தேதியன்று ஆஜராக வேண்டும் என கடந்த ஏப்ரல் 3ஆம் தேதியன்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருக்கும் நான்கு மாத கால வரையறை என்பது மிகக் குறைவானது என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதாலும் சென்னைப் பெருநகர நீதிமன்றத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதாலும் இந்த வழக்கை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டுமென ஜெயலலிதா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று, ஜெயலலிதாவும் சசிகலாவும் தவறாமல் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் பிண்ணனி

தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆண்டில் வருமானம் குறித்த கணிக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என சென்னை பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித் துறையால் 1996ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்குப் பிறகு அதே 93-94 ஆண்டில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல்செய்யவில்லை என சசிகலா மீதும் 1997ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption தனது தோழி சசிகலாவுடன் ஜெயலலிதா

அதேபோல, 1991-1992, 1992-1993 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல்செய்யவில்லை எனக் கூறி, 1997ஆம் ஆண்டு மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை.

இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டிருப்பதால், வழக்கை மேலும் மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இதனை எதிர்த்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், இது வழக்கை இழுத்தடிக்கும் செயல் என்றும், விளக்கம்கோரும் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தடை ஏதையும் வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நேரில் ஆஜராக கண்டிப்பான உத்தரவு

இதையடுத்து ஜெயலலிதா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, வழக்கு மீண்டும் ஏப்ரல் 3ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அன்று குற்றம் சுமத்தப்படுவதற்காக ஜெயலலிதாவும் சசிகலாவும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஏப்ரல் மூன்றாம் தேதியன்றும் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பதிலாக, தங்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென அவர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் என்ற அரசியல் சாசன பதவியைவகிப்பதால், ஏதாவது அவசரநிலை ஏற்பட்டால் தான் உடனடியாக முடிவெடுக்க வேண்டியிருக்கும் எனவும் அதனால், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்களிக்க வேண்டுமெனவும் தனது மனுவில் ஜெயலலிதா கோரியிருந்தார்.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி தட்சிணாமூர்த்தி, நேரில் ஆஜராகாமல் இருப்பது குறித்த மனு எதையும் இனி ஏற்க முடியாது என்றும் வரும் ஏப்ரல் 10ஆம் தேதியன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.