அஇஅதிமுகவிலிருந்து மலைச்சாமி நீக்கம் -- பேட்டி எதிரொலி?

படத்தின் காப்புரிமை AP
Image caption பேட்டி கொடுத்த மலைச்சாமி நீக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே. மலைச்சாமி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் “கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் தென் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே. மலைச்சாமி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான டாக்டர் கே. மலைச்சாமி தமிழகத்தின் உள்துறைச் செயலர், மாநில தேர்தல் ஆணையர் பொறுப்புகளை வகித்தவர்.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அ.இ.அ.தி.மு.கவில் இணைந்த அவர் 1999ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் பவானி ராஜேந்திரனைவிட சுமார் ஆறாயிரத்து அறுநூறு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். பிறகு, 2004ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் மலைச்சாமி இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அ.தி.மு.க அமைக்கவிருக்கும் கூட்டணி குறித்து, பிபிசி தமிழோசை உட்பட ஊடகங்களில் நேற்றும் அதற்கு முன் தினமும் அவர் வெளியிட்ட கருத்துக்களே, அவர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தச் செய்தி குறித்து மேலும்