சட்டப்பேரவை நிகழ்வுகள்: கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க. முடிவு

  • 22 ஜூலை 2014
சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து தி.மு.க. கண்டனப் பொதுக்கூட்டம் அறிவித்துள்ளது. (கோப்புப் படம்)

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளைப் பேச வாய்ப்பளிக்காதது, தி.மு.க. உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடரில் மூன்று முறை வெளியேற்றப்பட்டிருப்பது, தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஆகியவற்றைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்களை நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

முன்னதாக, இன்று காலையில் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.

அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் தனபால் சர்வாதிகாரியைப்போல செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதற்குப் பின், செவ்வாய்க்கிழமையன்று மாலை ஆறு மணி அளவில் தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு வாய்ப்பளிக்காத்தைக் கண்டித்தும் தி.மு.க உறுப்பினர்கள் மூன்று முறை வெளியேற்றப்பட்டிருப்பது, தொடர் முழுவதற்கும் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதையும் கண்டித்து, “தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு” என்ற பெயரில் மாவட்டத் தலைநகரங்களிலும் மற்ற முக்கிய இடங்களிலும் கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஜூலை 31ஆம் தேதியும் மற்ற நகரங்களில் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.