BBC tamil

முகப்பு > இந்தியா

2 ஜி தீர்ப்பு மறு பரிசீலனை இல்லை-உச்சநீதிமன்றம்

Facebook Twitter Google+
4 ஏப்ரல், 2012 - 17:17 ஜிஎம்டி
இந்திய உச்சநீதிமன்றம்

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2 ஜி) ஒதுக்கீடுகளை ரத்து செய்து இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி எஸ் சிங்வி மற்றும் கே எஸ் ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட அமர்வே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அலைக்கற்றை உரிமங்களை ஏலத்துக்கு விடாமல், முதலில் விண்ணப்பங்களை சமர்பித்த நிறுவனங்களுக்கு ஒதுக்கியது தவறு, இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, கடந்த பிப்ரவரியில், இந்திய உச்சநீதிமன்றம் இவ்வாறு செய்யப்பட்ட அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்தது.

இந்த வழக்கின் அடிப்படை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தனது கருத்தைக் கேட்காமல், இத்தீர்ப்பு தரப்பட்டது, கீழ் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் தனது வாய்ப்புகளை பாதிக்கும் என்று முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பினால் உரிமங்களை இழந்த நிறுவனங்களும், மறு பரிசீலனை மனுவை செய்திருந்தன.

மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையும் மறு பரிசீலனை கோரியிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் இரு மனுக்களைத்தவிர மற்ற அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்திருக்கின்றனர். முந்தைய தீர்ப்புகளில் எந்த குறைபாடுகளும் இருப்பதாக தாங்கள் கருதவில்லை என்பதால் அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ளனர்.

மத்திய அரசின் மனுக்கள் மீதான விசாரணை வரும் ஏப்ரல் 13ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாவின் மனு மீது தீர்ப்பளித்த நீதிபதிகள் சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணை, இந்த உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி மாதத்தின் தீர்ப்பால் பாதிக்கப்படாது என்று நீதிமன்றம் தெளிவாக்கியுள்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச தரப்பில், ஒரு தனி நபர் அரசு ஊழியர் அல்லது அமைச்சர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று கோரி மனு செய்ய உரிமை இல்லை என்று போட்டிருந்த மனு மற்றும், ரத்து செய்யப்பட்ட உரிமங்களை மீண்டும் வழங்க உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு போதாது என்று கூறி போட்டிருந்த இரு மனுக்களும் ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் புதன்கிழமையன்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter