BBC tamil

முகப்பு > இலங்கை

'தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பியனுப்ப வேண்டாம்'

25 பிப்ரவரி, 2012 - 12:00 ஜிஎம்டி
'தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பியனுப்ப வேண்டாம்'

பிரிட்டனில் தஞ்சம் கோரும் தமிழர்களை இலங்கைக்கு திருப்பியனுப்புவதை நிறுத்த வேண்டுமென்று மனித உரிமைகள் நிறுவனமான ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு அண்மையில் திருப்பியனுப்பப்பட்டவர்கள் இலங்கைப் படையினராலும் பொலிசாராலும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

பிரிட்டனில் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களில் மேலும் ஒரு தொகுதியினர் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட உள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை, பெரும்பாலும் தமிழர்களை, கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டன் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது.

இலங்கைப் படையினரால் மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை மேலும் ஒரு தொகுதியினரை இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கையை பிரிட்டன் கைவிட வேண்டுமென்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே திருப்பியனுப்பப்பட்டவர்கள் சிகரெட்டுக்களால் சுடப்படல், தலைகீழாய் கட்டப்பட்டும் ஆடைகளை களைந்துவிட்டும் தாக்கப்படுதல், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதல் போன்ற மோசமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக ஒப்புதல் அளிக்குமாறு துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறப்படுவது பற்றி விசாரித்துள்ளதாகவும் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு விவகாரங்களுக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் அலஸ்ட்யார் பர்ட் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter