ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மீண்டும் 'வெள்ளை வேன்' கடத்தல்கள்: பெட்டகம்

இலங்கையில் மீண்டும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான அச்சுறுத்தல்களும் கவலைகளும் அதிகரித்துள்ளன.

கடந்த சில மாதங்களில் காணாமல்போன 32 பேரில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்ணொருவர் உட்பட 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 20 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காணாமல்போனவர்களில் பலர் வௌ்ளை வேன் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் வௌ்ளை வேன் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட ராமசாமி பிரபாகரன் என்ற தமிழ் வர்த்தகர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவையில் நகரசபைத் தலைவர், தனது சகோதரரைக் கடத்திச் சென்று கொன்ற வெள்ளை வேன் ஆயுததாரிகளே அண்மையில் தன்னையும் கடத்த முயன்றதாக கூறுகிறார்.

அரசாங்கத்தின் அனுசரணை இன்றி இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் தலைநகரில் நடக்க வாய்ப்பில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன பிபிசியிடம் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் நடந்துவருவதாகவும் அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் காவல்துறை பேச்சாளர் எஸ்பி அஜித் ரோஹன பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தொடரும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.