நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (8.3 எம்பி)

'தமிழகத் தீர்மானம் யதார்த்தத்துக்கு புறம்பானது' - ராம்

27 மார்ச் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:28 ஜிஎம்டி

இந்தியாவின் இலங்கைக் கொள்கை குறித்து தமிழக அரசு ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது, இந்திய அரசியல் சட்டத்தின் படி, இந்திய வெளியுறவுக் கொள்கை என்பது மத்திய அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட ஒரு விஷயம், இதில் மாநில அரசு தனது பங்களிப்பைச் செய்யலாம், ஆனால் யதார்த்த்துக்குப் புறம்பான, தீவிரமான கோரிக்கைகளை வைக்க முடியாது என்று இந்து பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டில், அரசியல் கட்சிகள் இலங்கை பிரச்சினையை வைத்து போட்டா போட்டி அரசியல் நடத்துவதன் விளைவே தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை(27.3.13) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்றார் ராம்.

எனினும் இலங்கைப் பிரச்சினையில் ஐ.நா மன்றத் தலையீட்டை கோரும் தீர்மானத்துக்கு வலு இருக்காது, அது செல்லுபடியாகாது என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கைப் பிரச்சினையில் தொடர்ந்து வந்த மத்திய ஆளும் கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு பாராட்டுக்குரியது என்று கூறும் அவர், மத்திய அரசு சரியான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது என்றும், தனி ஈழக் கோரிக்கைக்கு ஆதரவு தருவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் அதிகாரப் பரவல் என்ற மத்திய அரசுகளின் நிலைப்பாடு சரியானது என்றும் கூறுகிறார் ராம்.

ஐபிஎல் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீர்ர்கள், தமிழகத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று ஐபிஎல் ஆளும் கவுன்சில் முடிவெடுத்திருப்பதும் தவறானது என்றார் ராம்.

ஐபிஎல் போட்டிகளுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தால் ஒட்டுமொத்தமாக அந்த ஐபிஎல் போட்டிகளையே தமிழகத்துக்கு வெளியே கொண்டு சென்று விடலாம், ஆனால் இலங்கை வீர்ர்கள் மட்டும் விளையாடக்கூடாது என்று முடிவெடுத்தது சரியல்ல எனவும் அவர் வாதிடுகிறார்.

மேலும், விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக்கக் கூடாது என்று இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து பதிலளித்த அவர், இது கொள்கையளவில் சரியானது, ஆனால் யதார்த்த்தில் அது போல எல்லா சமயங்களிலும் நடந்துகொள்ள முடிவதில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

குறிப்பாக வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 1980 ல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸை அமெரிக்கா புறக்கணித்தது, தென் ஆப்ரிக்காவின் நிறவெறி அரசுடன் விளையாட்டு உறவுகளை பல நாடுகள் முறித்தது ஆகியவைகளில் அரசியல் இருந்தது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.