ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியக் குழுவிடம் தமிழ் தரப்பு பேசியது என்ன ?

Image caption வட இலங்கையில் நிலைமைகள் மோசம் என்று குற்றச்சாட்டு.

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அமையும் ஒரு ஆட்சி முறை இந்தியாவில் இருப்பது போல் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் இந்தியத் தரப்புக்கு கூறப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், மன்னார் ஆயர், சிவில் சமூகப் பிரதிநிகள் உட்பட்டோர் பலர் சந்தித்து உரையாடினர்.

இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது என்றும், அந்த சட்டத் திருத்தத்தின் கீழ் அமைக்கப்படுகின்ற மாகாண சபை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர்களிடம் தெளிவாக விளக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறினார்.

இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்பதை அனைவரும் ஒரே தொனியில் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபை முறையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதை விட்டுவிட்டால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வேறு ஒருவரின் கைகளில் போய்விடும் என்பதாலேயே இப்போது மாகாண சபை முறைமையில் வேறு வழியின்றி ஈடுபட்டு வருவதாகவும் அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர் தரப்பில் என்ன தேவை என்பதையும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்ததாகவும் சரவணபவன் கூறினார்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாக சரவணபவன் தகவல் தந்தார்.

தமது கோரிக்கைகளை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதும் தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.