ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புராதானக் கோயில் வளாகத்தில் நடந்ததை தொல்லியலாளர் கண்டிக்கிறார்

மாமல்லபுரத்தில் சித்திரை நிலவுத் திருவிழாவில், பாமகவினர், உலகப் பாரம்பரியச் சின்னம் என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டிருக்கும், புகழ்பெற்ற கடற்கரைக் கோவிலில் ஏறி, அந்தக் கோவிலில் கட்சிக்கொடியை நாட்டியது, அந்த வளாகத்திற்கு சேதம் விளைவித்தது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்று தொல்லியலாளர் சத்யமூர்த்தி கூறுகிறார்.

பிபிசி தமிழோசைக்கு சத்தியமூர்த்தி அளித்த பேட்டியில், "இந்தக் கோயில் மிகவும் நுட்பமாகக் கட்டப்பட்ட ஒரு கலைப் படைப்பாகும், இது காலப் போக்கில் பலவீனமடைந்து வந்திருக்கிறது. இதில் இது போன்ற வன்செயல்கள் இடம்பெற்றிருப்பது வேதனைக்குரியது" என்றார்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டே இதே கட்சியின் நிகழ்வில் நடந்திருக்கிறது, அது குறித்து தொல்லியல் துறை மூலம் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற உலகப் பாரம்பரியச் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலில், மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிகாட்டிய சத்தியமூர்த்தி, ஆனால் தென்னிந்தியாவில் உள்ள இதேபோன்ற பாரம்பரிய சின்னமான மஹாபலிபுரம் கடற்கரைக் கோவிலுக்கும் இத்தகைய பாதுகாப்பு ஏதும் தரப்படவில்லை என்றார்.

இது போன்ற சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு பெரிதும் இல்லை என்றாலும், ஊடகங்களின் உதவியால் பொதுமக்கள் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்றார் அவர்.