ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

19 ஆவது திருத்தம்: "முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்காது"

  • 12 மே 2013

இலங்கையில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் என்று கருதப்படுகின்ற 19 ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கு குறைந்த அளவிலேனும் அதிகாரம் வழங்கும் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மாறாக, இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.

மாகாண சபைகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அல்லது இல்லாது ஆக்கும் என்கிற காரணத்தாலேயே 19 ஆவது திருத்தத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது கட்சி "13 ஆவது அரசியல் திருத்தத்தில் கை வைப்பதற்கு" எந்த வகையிலும் துணை போகாது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

தற்போது இருக்கின்ற 13 ஆவது சட்டத் திருத்தமே முழுமையான அதிகாரப் பரவலாக்கம் அல்ல என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் ஹஸன் அலி மேலும் தெவித்தார்.

நாட்டின் நீதித்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூஃப் ஹக்கிம் அவர்கள் 19 ஆவது திருத்தச் சட்டத்தை முன்மொழிந்தாலும் அதை தமது கட்சி எதிர்க்கும் எனவும் ஹஸன் அலி சுட்டிக்காட்டுகிறார்.