ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலேசியாவில் ஹிண்ட்ராஃப் தலைவர் வேத மூர்த்தி அமைச்சராகிறார்

Image caption அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வேதமூர்த்தி

மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களை முன்னெடுப்பதாகக் கூறும் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி அமைச்சராகிறார்.

அண்மையில் அங்கு நடந்துமுடிந்த தேர்தலில், ஆளும் தேசிய முன்னணிக்கு ஹிண்ட்ராஃப் தனது ஆதரவை வழங்கியது.

தேர்தலில் வெற்றி பெற்ற நஜீப் ரசாக் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தமது அமைச்சரவையை அறிவித்துள்ளார்.

அதில், ஹிண்ட்ராஃப் தலைவர் வேதமூர்த்திக்கு பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதை பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்திய வேதமூர்த்தி, இதன்மூலம் தமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

இதுவரை இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளுக்காக வெளியிலிருந்து போராடி வந்த தமது அமைப்பு இனி அரசுக்கு உள்ளேயிருந்து போராடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னர் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்த தேசிய முன்னணி, அதை நிறைவேற்றும் வகையில் ஒரு சிறப்புக் குழுவை நியமித்து அதை மேற்பார்வை செய்யும் அமைப்பின் தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வேதமூர்த்தி கூறுகிறார்.

பல ஆண்டுகளாக போராடிய ஹிண்ட்ராஃபுக்கு அதன் கோரிக்கைகளை செயல்படுத்த கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகவே அமைச்சுப் பதவியை தான் பார்ப்பதாகக் கூறும் அவர், நாடற்ற நிலையில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறுகிறார்.

தான் அமைச்சரவையில் சேர்ந்தாலும், ஹிண்ட்ராஃப் அமைப்பு ஒரு அரசியல் கட்சியாக மாறாது எனவும் வேதமூர்த்தி உறுதியாகக் கூறுகிறார்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.