ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஏக்கர் காணி வேண்டும்'

Image caption ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களை சொந்தமாக்க அரசாங்கத்தில் உள்ள மலையகக் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

இலங்கையில் மலையகத் தோட்டப்புறங்களில் உள்ள காணிகளை ரகசியமாக வெளியாருக்கு விற்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் இரண்டு ஏக்கர் காணியை தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பெருந்தோட்ட மக்களின் நில உரிமைக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வரவு செலவுத் திட்ட உரையின்போது, ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின்படி மலையகத்திலுள்ள தோட்டக் காணிகள் பங்கிடப்படும்போது, தோட்டத் தொழிலாளர்களுக்கே முன்னிரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தமது தேர்தல் வாக்குறுதிகளில் இந்தக் காணி விவகாரத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த எஸ். மகேந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் அவர்களுக்கு சொந்தமாக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துவருகின்றனர்.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல்கட்சிகள் அரசாங்கக் கூட்டணியில் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.