ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இந்தியாவில் மகளிர் ஷரியா நீதிமன்றம் தேவை"

  • 14 ஜூலை 2013

இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் மத மற்றும் பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, இஸ்லாமியப் பெண்களுக்கு என்று தனியாக, ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஒன்று முன்வைக்கபப்ட்டுள்ளது.

நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட பாரதிய முஸ்லிம் பெண்கள் இயக்கம் எனும் அமைப்பே இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது.

Image caption பாரதிய முஸ்லிம் பெண்கள் இயக்கத்தின் ஒரு கூட்டம்.

முஸ்லிம் பெண்களுக்கு, ஆண்களால் நடத்தப்படும் ஜமாத் அமைப்புகளில் சரியான நீதி கிடைப்பதில்லை என்றும், அதன் காரணமாக பெண்கள் பல அவலங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த அமைப்பினர் கூறுகிறார்கள்.

ஜமாத் அமைப்பு ஆண்களின் பார்வையிலேயே பிரச்சினைகளை அணுகுகிறது என்றும் அதன் காரணமாகவே முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நியாயமான தீர்வு காணும், மகளிரால் நடத்தப்படும் நீதிமன்றங்கள் தேவை என்றும் பாரதிய முஸ்லிம் பெண்கள் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்பாளரான ஜெய்புநிஷா பாபு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Image caption ஜெய்புநிஷா ரியாஸ் பாபு

ஆடவர்களைக் கொண்டு நடத்தப்படும் ஜமாத்துக்கு சட்ட ரீதியிலான அங்கீகாரம் இல்லை என்று கூறும் அவர், அதே போன்று மகளிர் நடத்தும் அமைப்புகளையும் நடத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்க முடியும் எனவும் கூறுகிறார்.

தமது அமைப்பின் சார்பில் இவ்வகையிலான நீதிமன்றம் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் வரைவுச் சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.