ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெலிவேரிய தாக்குதல்: 'இராணுவ விசாரணையில் நம்பிக்கை இல்லை'

Image caption வெலிவேரிய தாக்குதல் பற்றி இராணுவம் நடத்தும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை: சிவில் அமைப்புகள்

இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய என்ற இடத்தில் மக்கள் போராட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவமே விசாரணை நடத்துவதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று நீர்கொழும்பு நகரில் இன்று சனிக்கிழமை எதிர்ப்பு பேரணி நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த பல சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஓராண்டுக்கு முன்னர் மீனவர் ஒருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளி ஒருவரும் போராட்டங்களின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றும் நீதிகேட்டு போராட்டம் நடத்துபவர்களுக்கு துப்பாக்கி வேட்டுதான் பதிலுக்கு கிடைக்கிறது என்றும் இன்றைய நீர்கொழும்பு போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஸ்ரீவிமுக்தி மீனவ பெண்கள் சங்கத்தின் இணைப்பாளர் கமலநாதன் சுபாஷினி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிவில் அமைப்புகளும் அமைப்புகளுமாக நூற்றுக்கணக்கானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு

Image caption கிறிஸ்த தேவாலயத்திலும் படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

வெலிவேரிய சம்பவத்தில் உயிரிழந்த மாணவனின் மரணச் சடங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது. காயமடைந்த பலரும் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

படுகாயமடைந்த 4 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க பிபிசியிடம் கூறினார்.

இதேவேளை, வழமையில் சனிக்கிழமை நாட்களில் சந்தைக் கடைகள் களை கட்டியிருக்கும் வெலிவேரிய நகரம் இன்று மூன்றாவது நாளாக கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடப்பதாக உள்ளூர் செய்தியாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

நகரில் படையினர் புகுந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகிலும் மற்ற பல இடங்களிலும் ஆயுதந்தரித்த இராணுவத்தினரும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரதேசத்துக்கு சென்றுவரும் பல்வேறு எதிரணி அரசியல் தலைவர்களும் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருகின்றனர்.

'போராட்டம் நடந்த தினத்தன்று சர்ச்சைக்குரிய தொழிற்சாலையிலிருந்து மூன்று கொள்கலன் வாகனங்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அரசின் உயர்மட்டத்திலிருந்து வந்த உத்தரவின்படியே இராணுவத்தினர் மோசமாக நடந்துகொண்டனர்' என்று அப்பிரதேசத்துக்கு சென்றுவந்த நவ சமஜமாஜ கட்சித் தலைவர் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன பிபிசியிடம் தெரிவித்தார்.

'ஊடகங்கள் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்'

இதேவேளை, வெலிவேரிய சம்பவம் பற்றிய செய்திகளை ஊடகங்கள் அரசின் அழுத்தம் காரணமாக இருட்டடிப்புச் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

ஊடகங்கள் உண்மையை வெளிப்படுத்தாவிட்டால் கிராமங்களுக்குள் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாக, போராட்டம் வன்முறையாக மாறமுன்னர் சுத்தமான குடிநீர் கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேச பௌத்த பிக்கு தேரிபஹ ஸ்ரீ தம்மா தேரர் பிபிசியிடம் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான ஐந்து பேரடிங்கிய குழுவினர் விசாரணை நடத்திவருவதாக இராணுவம் கூறுகிறது.

அடுத்துவரும் இரண்டுவாரங்களுக்குள் விசாரணை அறிக்கை இராணுவத் தளபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.