ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மக்களை விசாரிக்க இராணுவத்துக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை'

Image caption அவசர கால சட்டம் நடைமுறையில் இல்லாத சூழ்நிலையில், மக்களை இராணுவம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்கிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கையில் வெலிவேரிய பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1-ம் திகதி பொதுமக்கள் மீது நடந்த தாக்குதல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள இராணுவத்தினர், பிரதேச மக்களை முகாம்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளது.

சட்டப்படி பொதுமக்களிடம் விசாரணை நடத்தும் அதிகாரம் பொலிசாருக்கே இருப்பதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெலிவேரிய பிரதேச மக்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே, இராணுவத்தினரின் முகாம்களுக்கு மக்களை அழைப்பதை தடுத்து நிறுத்தியதாகவும் அதன்படி, பிரதேச மக்கள் வெலிவேரிய பொலிஸ் நிலையத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹநாம ஹேவா தமிழோசையிடம் கூறினார்.

'பொலிசாருக்கே அதிகாரம் உள்ளது'

Image caption நாட்டின் சட்டப்படி பொலிசாருக்கே மக்களிடம் வாக்குமூலம் பெற அதிகாரம் உள்ளது: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

'நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது' என்றார் பிரதிபா மஹநாம ஹேவா.

இராணுவம் தமது உள்ளக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இரண்டு வாரகால அவகாசம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

'1979-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின்படி, விசாரணை செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு மட்டும்தான் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இன்று நாட்டில் அவசரகால சட்டவிதிகள் தற்போது நடைமுறையில் இல்லை' என்றார் மனித உரிமைகள் ஆணையாளர்.

இதேவேளை இலங்கை இராணுவம் வெலிவேரிய சம்பவம் தொடர்பான உள்ளக விசாரணையை நடத்துவதானால், அங்கு சம்பவ தினத்தன்று படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களிடமே முதலில் வாக்குமூலங்களை பதிவுசெய்ய வேண்டுமென்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கும்போது, அந்த இராணுவத்துக்கு எதிராக இராணுவ முகாம்களுக்குச் சென்று வாக்குமூலங்களை அளிக்க மக்கள் அச்சப்படுவதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது.