ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சண்டே லீடர் ஊடகவியலாளர் வீட்டில் குற்றக் கும்பலுடன் பொலிஸ் மோதல்

  • 24 ஆகஸ்ட் 2013
Image caption இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஊடகவியலாளர் தொழிற்சங்கத்துக்கு மந்தனா இஸ்மாயில் (படத்தில் வலது புறம் இருப்பவர்) தலைமை தாங்குகிறார் ( படம்- சண்டே லீடர்)

இலங்கையில் சண்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியரின் வீட்டுக்குள் இன்று அதிகாலை புகுந்த கும்பல் ஒன்று அவரைக் கத்தி முனையில் வைத்திருந்து தேடுதல் நடத்திய சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனாவின் வீட்டுக்குள் இன்று சனிக்கிழமை அதிகாலை நுழைந்த கும்பல், அங்கிருந்த அலமாரிகளை உடைத்து ஆவண கோப்புகளையும் சோதனையிட்டுள்ளதாக அந்த சுதந்திர ஊடக இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த கும்பலுடன் பொலிஸார் அதிரடியாக நடத்திய மோதலில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நால்வர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குற்றக்கும்பலால் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்ட நான்கு பொலிஸாரும் மருத்துவமனையில் இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக சிறிவர்தன பிபிசியிடம் கூறினார். இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்குள் நுழைந்த குற்றக்கும்பல் ஒன்று அவரது நெஞ்சிலும் கழுத்திலும் கத்திகளை வைத்தபடி, வீ்ட்டிலுள்ள அலமாரிகளை உடைத்து தேடுதல் நடத்தியுள்ளது.

'இது எங்களுக்கு கிடைத்துள்ள ஒரு கான்ட்ராக்ட்- ஒப்பந்தம் என்று அவர்கள் கூறினார்கள். உங்களோடு பிரச்சனையில் உள்ள ஒருவர் தான் இந்த வேலையை எங்களிடம் தந்துள்ளார் என்றும் கூறினார்கள்' என்று பிபிசியிடம் கூறினார் மந்தனா இஸ்மாயில்.

Image caption நேரடி மோதலில் சந்தேகநபர் ஒருவர் பலி, 4 சந்தேகநபர்களும் 4 பொலிசாரும் காயம்

மந்தனா இஸ்மாயிலின் கணவர் ரொமேஷ் அபேவிக்ரமவும் ஓர் ஊடகவியலாளர்.

வேலைமுடிந்து அதிகாலையில் வீடுதிரும்பிய மந்தனாவின் கணவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவர் பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். உடனடியாக விரைந்துவந்த பொலிஸாருடன் அந்தக் குற்றக்கும்பலுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

கொள்ளையர்கள்?

'கொள்ளையடிக்கவந்தவர்களுடன் ஏற்பட்ட மோதலில் சுயபாதுகாப்புக்காக பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒரு கொள்ளையர் உயிரிழந்துள்ளார். நான்குபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்ட நிலையில் நான்கு பொலிசாரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்றார் பொலிஸ் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன.

'இவர்கள் நிச்சயமாக கொள்ளையடிக்கும் நோக்குடன்தான் வந்திருக்கிறார்கள். அவரது ஊடகத் தொழிலுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது' என்றார் புத்திக சிறிவர்தன.

ஆனால் தமது வீட்டுக்குள் வந்தவர்கள் கொள்ளையர்களாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை என்று ஊடகவியலாளர் மந்தனா பிபிசியிடம் கூறினார்.

'கடந்த வியாழன்று இரவிலிருந்து சந்தேகத்துக்கு இடமான பல சம்பவங்கள் நடந்துவந்தன. அன்று பூனையொன்றைக் கொன்று வீட்டுக் கதவோரத்தில் போட்டிருந்தார்கள். அதன் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு எனது கணவரின் கார் டயர் கத்தியால் வெட்டப்பட்டிருந்தது. அதன் பின்னர் சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது' என்றார் மந்தனா இஸ்மாயில்.

இலங்கை ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கம் என்ற அமைப்பொன்றை மந்தனா அண்மையில் உருவாக்கியிருந்தார்.

ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருவார கால விஜயமாக இலங்கை செல்லவுள்ள ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையையும் ஊடகவியாளர் அமைப்புகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.