ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'முஸ்லீம்கள் குறித்த கோட்டாபய ராஜபக்ஷ கருத்து சரியல்ல'

  • 6 செப்டம்பர் 2013
Image caption 'சிறுபான்மையர் அன்னியப்பட்டு நிற்பதால்தான் பெரும்பான்மையினரின் கடும்போக்கு' --கோட்டா கருத்தால் சர்ச்சை

இலங்கையில் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் தங்களை இலங்கையர்களாகப் பார்ப்பதில்லை , அவர்கள் இவ்வாறு தங்களை அந்நியப்படுத்திக்கொள்வதால்தான், பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் கடும்போக்கு நிலை கொண்ட குழுக்கள் உருவாகின்றன என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் கருத்தரங்கு ஒன்றில் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து சரியல்ல என்கிறார் எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா இலங்கையில் சிறுபான்மையினர் பெரும்பான்மை சமூகத்தின் மீது படர்ந்து வளரும் கொடிகள்தாம் என்று முன்னாள் ஜனாதிபதி விஜெதுங்கே கூறியதாக்க் கூறும் ஹனீபா இந்த சிந்தனையோட்டத்தில், சிறுபான்மையினர் பெரும்பான்மை சமூகம் என்ற விருட்சத்தைச் சார்ந்து நிற்கும் கொடிகள்தாம் என்ற கருத்தாக்கம் மேலோங்கி நிற்கிறது என்றார்.

இந்த சிந்தனைதான், அடுத்தடுத்து வந்த சிங்கள அரசியல்வாதிகளின் மீது செல்வாக்கு செலுத்தியது. இந்த சிந்தனை சிங்கள மக்களுக்கும தேர்தல் காலங்களில் பிரச்சாரங்கள் ஊடாகப் புகட்டப்பட்டு தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்தப்பட்டது என்கிறார் ஹனீபா.

இந்த சிந்தனையின் விளைவே கோட்டாபய ராஜபக்ஷவின் இந்தக் கருத்தும் என்று அவர் கூறுகிறார்.

சிறுபான்மை சமூகத்தினரின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் போதிய ஊக்கம் தரப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் பொதுவாக இலங்கையில் பெரும்பாலான, தமிழ்,முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களிடம் தாங்கள் இலங்கையர்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரிஷாத் பதியுதீன் கண்டனம்

இதனிடையே பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ , இனச்சிறுபான்மையினர் குறித்துத் தெரிவித்த கருத்துக்களைத் தாம் கண்டிப்பதாக, அனைத்திலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறது.

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தக் கட்சியின் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த கருத்துக்கள் சில மதவாத சக்திகள் தெரிவித்து வரும் பொய்யான கூற்றுக்களுக்கு நம்பகத்தன்மை தரும் என்று அவர் கூறியிருக்கிறார். முஸ்லீம்கள் இலங்கையில் தேசபக்தியுடன் இருந்து வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, பிரிவினைவாத்த்துக்கு எதிராக நின்றதன் மூலம் தங்கள் உயிர் , உடமைகள் இழப்பு மற்றும் வடக்கேயிருந்து இனச்சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள் என்றார் ரிஷாத் பதியுதீன்.

ஹக்கீமும் கண்டிக்கிறார்

கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமும் கண்டனம் செய்துள்ளார். முஸ்லீம் சமுதாயத்தில் ஒரு சிலரிடம் தீவிரவாதம் இருக்கலாம், ஆனால் பெரும்பான்மையான முஸ்லீம்களிடம் அது போன்ற போக்கு இல்லை. மேலும், குறுகிய மனோபாவமும், காழ்ப்புணர்ச்சியும் சிறுபான்மை சமூகத்துக்கு மட்டும் சொந்தமல்ல இந்த வியாதியிலிருந்து பெரும்பான்மை சமூகமும் முழுமையாக விடுபட்டுவிடமுடியாது என்று அவர் கூறினார். அஹிம்சை தத்துவத்தை போதித்தவரின் மதத்தின் பாதுகாவலர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பதால்தான் சிறுபான்மை சமூகத்தினர் அன்னியப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றார்.