ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மத்திய மாகாணசபைத் தேர்தல்: தேவைகளும், வாக்குறுதிகளும்

Image caption மத்திய மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரம் மும்முரம்

இலங்கையில் மத்திய மாகாணசபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அரசிய கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்களாலும் பேரணிகளாலும் மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் நகரங்கள் எங்கும் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது.

வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்துக்கு அடுத்தபடியாக அதிகளவாக சுமார் நாலுலட்சத்துக்கும் அதிக தமிழர்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தை இலக்குவைத்து, ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் வந்துசென்றுவிட்டார்.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஹட்டனில் தனது பிரச்சாரக் கூட்டத்தை ஞாயிற்றுக் கிழமை நடத்தினார்.

மத்திய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும் ஒரே அரசாங்க கூட்டணியில் ஆனால் ஒன்றை ஒன்று எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அரசின் இன்னொரு பங்காளியான, மறைந்த சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்துக்கொண்டு தனியான அணியாக களமிறங்கி்யிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியும் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளுடன் மத்திய மாகாணத்தில் போட்டியிடுகிறது.

Image caption தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட காலப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன

வாக்குரிமை

தமிழோசையிடம் பேசிய பலர் தமக்கு பல தசாப்தங்களாக வாக்குரிமை கூட கிடையாது என்றனர். கடந்த 1964 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ஆயிரக் கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அரசியல் சூழ்நிலைகளால் இந்தியாவுக்கு அனுப்பப்படாமல் விட்ட பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் அப்போது இழந்த வாக்குரிமையை இன்னும மீளப்பெறவில்லை.மொத்

மொத்தம் 56 ஆசனங்களைக் கொண்ட மத்திய மாகாணசபையில் 16 ஆசனங்களைக் கொண்ட நுவரெலியா மாவட்ட தமிழர்களின் எதிர்காலம் என்ன... எதிர்வரும் 21ம் திகதி தேர்தல் முடிவு சொல்லும்