ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

2ஜி விவகாரம்: கூட்டுக்குழு அறிக்கைக்கு, திமுக, பாஜக மாற்று அறிக்கை அளித்தன

  • 10 அக்டோபர் 2013
Image caption 'முதல் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா விசாரணைக்கு அழைக்கப்படவில்லை'

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தை ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு தனது அறிக்கையை சமீபத்தில் சமர்பித்துவிட்ட நிலையில், இந்த அறிக்கையோடு உடன்படாத பாரதீய ஜனதா கட்சியும், திமுகவும் தனித்தனியே தங்களது நிலைப்பாட்டை அறிக்கைகளாக சமர்ப்பித்திருக்கின்றன.

திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த இந்த விவகாரத்தில், அவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். அமைச்சர் பதவியையும் அவர் இழந்திருந்தார்.

இந்த நிலையில். இந்த விஷயத்தினை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜே.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு, குற்றம் சாட்டப்பட்டவரான தன்னை விசாரிக்க அனுமதி அளிக்கவேண்டும் என்று ராசாவின் கோரிக்கையை நிராகரித்து, அவரை விசாரிக்காத நிலையிலேயே தனது அறிக்கையைத் தயாரித்த்து.

'ராசா அழைக்கப்படாதது வருந்தத்தக்கது'

இந்த அறிக்கை கடந்த மாதம் சமர்பிக்கப்பட்ட நிலையில், திமுக இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை விளக்கி 26 பக்கங்கள் கொண்ட ஒரு மாற்று அறிக்கையினை அளித்திருப்பதாக திமுக நாடாளுமன்றக்குழுவின் தலைவரும், கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்தவருமான டி.ஆர்.பாலு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ராசா விசாரிக்கப்படாதது வருந்தத்தக்கது என்று அவர் கூறினார்.

இந்த அறிக்கையில் திமுக சார்பில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் வெளியில் கூற முடியாது என்று அவர் கூறினார்.

அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு விவாதத்துக்கு வரும்போது, தங்களது மாற்று அறிக்கைகளும் இணைக்கப்பட்டு வைக்கப்படும் , அப்போது தங்களது கருத்துக்களை வெளிப்படையாக நாடாளுமன்ற விவாதத்தில் வைக்க முடியும் என்று பாலு தெரிவித்தார்.

'காங்கிரஸுக்கு சாதகமான அறிக்கை'-பாஜக

Image caption பாஜகவும் எதிர்ப்பு

இரண்டாம் தலைமுறை அலைகற்றை விவகாரம் தொடர்பாக, பாராளுமன்றக் கூட்டுக் குழு அளித்துள்ள அறிக்கையை எதிர்த்து 36 பக்க மறுப்புரையை தயாரித்துள்ளதாக பிஜேபி கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் சின்ஹா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் குழுவின் அறிக்கை ஏற்புடையதாக இல்லை என தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று அந்த அறிக்கையில் நற்சான்று அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முக்கியகுற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தன்னையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட குழு அவர் மீதே குற்றம் சாற்றியுள்ளது.

கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அறிக்கையாக மட்டுமே இதை தயாரித்துள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.

இத்தகைய காரணங்களால் முழுமையாக இந்த அறிக்கையை ஆராய்ந்த பிறகே அதற்கான மறுப்புரை உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.