ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பிக்கு தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவே மகன் கூறினான்'

வவுனியாவில் பௌத்த பிக்கு ஒருவரால் நடத்தப்படும் இல்லம் ஒன்றில் தமிழ் சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வந்த முறைப்பாடு குறித்த தாம் புலனாய்வுகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை பொலிஸ் தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் பௌத்த பிக்கு இதுவரை கைது செய்யப்படாதது குறித்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் சங்கத்தால் விமர்சிக்கப்பட்டிருந்தது.

அது குறித்து பொலிஸ் தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்களிடம் கேட்ட போது, முதற்கட்ட விசாரணைகளின் போது, அந்தச் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட போது அவன் அந்த பிக்குவின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று கருதப்படுவதாகவும் அதன் காரணமாகவே அவர் உடனையாகக் கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

''முதல் தடவை அந்தச் சிறுவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டானா என்று பரிசோதனை நடத்தப்பட்ட போது, அவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்று மருத்துவச் சோதனை முடிவு காண்பித்தது. இருந்த போதிலும், பின்னரும் சிறுவர் துஷ்பிரயொகம் குறித்த முறைப்பாடு ஒன்று வந்தது. அப்போது அந்தச் சிறுவன் அந்த பிக்குவிடம் இருக்கவில்லை. ஆனாலும், அந்த புத்த பிக்குவிடம் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது. புலன்விசாரணைகள் தொடர்ந்து நடக்கின்றன'' என்று அஜித் றோகண கூறியுள்ளார்.

ஆனால், அந்தப் பிக்குவின் வசம் இருக்கும் போதே தனது மகன் துஷ்பிரயோகத்துக்கு ஆளானதாக சிறுவனின் தாயாரான முத்துசாமி சதானந்தகுமாரி கூறியுள்ளார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.