ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 10

Image caption தமிழ் பள்ளிக்கூடங்களை இராணுவ அரசு மூடியதால் பர்மாவில் தமிழ்க் கல்வி பாதிக்கப்பட்டது

பர்மாவில் தற்போது இருக்கும் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். நான்காவது அல்லது ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஒரு சில கிராமங்களைத் தவிர, தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடிய சூழல் பெரும்பாலான ஊர்களில் இல்லை. அன்றாட வாழ்வில் பர்மிய மொழியைப் பேசவேண்டிய தேவையிருப்பதால் தமிழ் மொழியின் தேவை பெருமளவு குறைந்துவிட்டது.

தமிழர்கள் முதலில் வந்து குடியேறிய இடங்களில் ஒன்று மால்மியன். இங்கே தமிழர்கள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் வாழும் 20 வயது மதிக்கத்தக்க சுமதி என்ற தமிழ்ப் பெண்ணும் பர்மியப் பெண்களைப் போல உடையணிந்துள்ளார். சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்க சந்தனத்தைப் போன்ற கனக்காவை அரைத்து கன்னத்தில் பூசிக் கொண்டுள்ளார். ஆனால் சரளமாகத் தமிழ் பேச அவரால் முடியவில்லை. அவரது சகோதரிக்கு தமிழ் சுத்தமாகத் தெரியவில்லை.

ரங்கூனில் பல பகுதிநேர தமிழ் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. இங்கெல்லாம் இலவசமாக தமிழ் சொல்லித் தரப்படுகிறது. இருந்தும் ரங்கூனிலேயே தமிழை சரியாக பேசமுடியாதோர் நிறைந்துள்ளனர்.

தற்போது 50 வயதைத் தாண்டிய பலர் தமிழின் தொன்மை அறிந்தவர்களாக திருக்குறளையும் பிற இலக்கியங்களையும் படித்து ரசிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். தமிழர்கள் தமது மொழியை இழந்தால், கலாச்சாரத்தையும் தமது அடையாளத்தையும் இழக்க வேண்டிவரும் என்ற கவலை சமூகப் பொறுப்புள்ளவர்களின் மத்தியில் காணப்படுகிறது.

கால ஒட்டத்தில் தமிழர்கள் பர்மிய சமூகத்தில் வேகமாக கலந்து வருவதாகக் கூறுகிறார் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையத்தைச் சேர்ந்த செல்வகுமார்.

பர்மிய அரசின் விண்ணப்பங்களில் கூட தம்மை தமிழர்கள் – இந்திய வம்சாவளிகள் என்று அடையாளப் படுத்திக்கொள்ளப் பலர் தயங்குகின்றனர். இந்துக்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர். தமிழ் தெரியாத ஒரு தலைமுறையே இங்கே உருவாகிவிட்டதாக பத்திரிகையாளரான நைனார் முகமது வருத்தப்படுகிறார்.

பர்மாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன. பர்மிய மொழி 65 சதவீத மக்களால் பேசப்படுகிறது. அதுவே தேசிய மொழியாக இருக்கிறது. ஷான், கரேன், கச்சின், மோன் போன்ற மொழிகளையும் கணிசமானோர் பேசுகின்றனர். ஆனால் இவை பயிற்று மொழிகளாக இல்லை

பள்ளிக்கூடங்களில் பர்மிய மொழியின் ஆதிக்கம்

Image caption இளம் தலைமுறைக்கு தமிழ்க் கல்வியை போதிக்க வேண்டிய தேவை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்

தமிழ்ப் பள்ளிக்கூடங்களை இராணுவ ஆட்சி மூடியது. தமிழ் நாட்டில் இருந்து பொழுதுபோக்கு பத்திரிகைகளை இறக்குமதி செய்யவும் சிக்கல்கள் தோன்றின.

இதனால் தமிழ் படிக்க முடியாத சூழல் பல தசாப்தங்கள் நாட்டில் நீடித்தது. பர்மியர்கள் சூழ வாழ்ந்த பல தமிழர்களுக்கு வீட்டுக்கு வெளியே தமிழைப் பேசவும் வாய்ப்பில்லை. நகர்புறங்களில் வாழும் படித்த – ஒரளவுக்கு வசதிபடைத்த சிலர் தமிழ் மீது கொண்ட காதலால் தனி ஆசிரியர்களை அமர்த்தி தம் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தந்தனர்.

விவசாயக் கூலிகளாக, கடைகளில் வேலை செய்பவர்களாக இருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களால் பொருளாதாரச் சூழல் காரணமாக தமது குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க முடியவில்லை.

தமிழர்கள் பலர் வீட்டிலும் பர்மிய மொழியைப் பேசியதால்- தமிழ் மொழியைப் பேசும் வாய்ப்பு குறைந்துவிட்டது. கோயில்களில் தேவாரத்தையும் திருவாசகத்தையும், திருஅருட்பாவையும் சிறிது கற்றுக் கொள்வதுடன் பலரின் தமிழ்க் கல்வி முற்றுப் பெறுகிறது.

பர்மியப் மொழியில் பள்ளிப் பாடங்களைக் கற்க வேண்டிய நிலையில் உள்ள மாணவர்கள் பெற்றோரின் வற்புறுத்தலாலேயே பெரும்பாலும் தமிழ் படிக்கின்றனர். தமிழை கூடுதல் சுமையாகவே அவர்கள் கருதுகின்றனர்.