நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.9 எம்பி)

கேலம் மேக்ரேவுக்கு எதிராக விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

11 நவம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:50 ஜிஎம்டி

கேலம் மேக்ரே விடுதலைப் புலிகளின் சம்பளப் பட்டியலில் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி இலங்கை சென்றுள்ள சேனல் 4 தொலைக்காட்சியின் செய்தியாளர் கெலம் மேக்ரே உள்ளிட்ட பிரித்தானிய செய்தியாளர்கள் கொழும்பு விமானநிலையத்தில் சென்றிறங்கிய சந்தர்ப்பத்தில் அங்கு காத்திருந்த குழுவொன்று கோசமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தேசிய இணக்கப்பாட்டை ஊக்குவிப்பதற்கான இயக்கம் என்ற பெயர் தாங்கிய சுலோக அட்டைகளுடன் விமான நிலையத்தின் வரவேற்போர் கூடத்தில் கூடியிருந்தவர்கள், கெலம் மேக்ரே விடுதலைப் புலிகளின் சம்பளப் பட்டியலில் இருப்பதாக கோசமிட்டனர்.

அவர்கள் அங்கிருந்து அகற்றப்படும்வரை சேனல் 4 செய்தியாளர்கள் விமானநிலையத்தை விட்டு வெளியேறவில்லை. அதன்பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் சிலர் கேலம் மேக்ரேவிடம் கேள்வி எழுப்பினர்.

கேலம் மேக்ரேவிடம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நீங்கள் ஏன் ஆவணம் படம் வெளியிட்டீர்கள் என்று அங்கிருந்த ஒருவர் கேள்வி எழுப்பினார்.

'விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்கள் இழைத்துள்ளதாக நாங்கள் அந்தப் படத்தில் கூறியிருக்கிறோம். இரண்டு தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதில் நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம்' என்று பதிலளித்தார் கேலம் மேக்ரே.

'அதேநேரம் அரசபடைகள் நடத்திய ஷெல் தாக்குதல்களில் தான் பெரும்பான்மையான மக்கள் உயிரிழந்தார்கள் என்பதிலும் தெளிவாக உள்ளோம்' என்றும் கேலம் மேக்ரே கூறினார்.

'போரின் கடைசிக் கட்டத்தில் அரச படைகளின் ஷெல் தாக்குதல்களில் எந்தவொரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று கூறுகின்ற ஒரு அரசாங்கத்தைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். இசைப்பிரியா மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அவர் உயிருடன் பிடிபட்ட பின்னர் தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்று இப்போது தெரியவந்திருக்கிறது' என்றார் கேலம் மேக்ரே.

பிரதமரின் குழுவில் கேலம் மேக்ரே

கேலம் மேக்ரே கொழும்பு விமான நிலையத்தில்

இலங்கையின் கொலைக்களம் மற்றும் பாதுகாப்பு வலயம் (நோ ஃபயர் சோன்) ஆகிய செய்தி ஆவணப் படங்களை வெளியிட்டவர் சேனல் 4 செய்தியாளர் கேலம் மேக்ரே.

இலங்கை அரசாங்கம் இறுதிக்கட்டப் போரின்போது, சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறியுள்ளதாக கேலம் மேக்ரே அவரது படங்களில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அவருக்கு இலங்கை செல்ல வீசா வழங்கப்படுமா என்ற சந்தேகம் நீண்டகாலமாக நிலவியது.

இந்த நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுடன் இலங்கை வரும் 30 ஊடகவியலாளர்களின் பட்டியலில் சேனல் 4 செய்தியாளர் கேலம் மேக்ரேவின் பெயரும் இருந்தபடியாலேயே அவருக்கு வீசா வழங்கியதாக இலங்கை அரசு கூறுகிறது.

'பிரதமர் டேவிட் கேமரனுடன் 30 பேர்கொண்ட குழுவொன்று வருகிறது. பாதுகாப்புக்காகவே அவர் அந்தக் குழுவில் வருகிறார். மற்ற 29 பேரும் வரும்போது ஒருவரை மட்டும் நிறுத்த தேவையில்லை என்று நாங்கள் கருதினோம்' என்றார் இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.

இலங்கை வந்துள்ள கெலம் மேக்ரே விடுதலைப் புலிகளின் சம்பளப் பட்டியலில் இருக்கிறார் என்று இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

'அந்தப் பழியை துடைக்க நல்ல சந்தர்ப்பமாக அவர் இந்த இலங்கை வருகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.